'அடுத்தடுத்து ஹேப்பி நியூஸ் சொன்ன பிரபல நிறுவனம்!'... 'ஒரு பெரிய சிக்கலுக்கு தீர்வு கிடைச்சிருச்சு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்அனைத்து நாடுகளும் எளிதில் பயன்படுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை மாடெர்னா நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உலகம் முழுவதுமே கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே அனைவருடைய பெரும் நம்பிக்கையாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சமீபமாக அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் நிறுவனம் தங்களுடைய தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 90% திறனுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து ஃபைசர் தடுப்பூசிக்கான டிமாண்ட் உலகம் முழுக்க அதிகரிக்க, அதை இந்தியாவுக்கு எப்படி கொண்டுவருவது என்பது குறித்த பேச்சு எழுந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஃபைசர் தடுப்பூசி சக்திவாய்ந்ததாக இருப்பதாக கூறப்படும்போதும், அதை உலகம் முழுக்க எடுத்துச்சென்று மக்களுக்கு போடுவதில் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது ஃபைசர் தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் மட்டுமே சேமித்து வைக்க முடியும். அப்படி சேமிக்க தவறினால் தடுப்பூசி கெட்டுவிடும் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அதற்கு ஏற்ற வசதிகள் இல்லாதது தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தியள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்காவை சேர்ந்த மாடெர்னா நிறுவனத்தின் தடுப்பூசி பற்றிய நம்பிக்கை தரும் அறிவிப்பு ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. அதில், கொரோனா பாதிப்பை தடுப்பதில் மாடெர்னா தடுப்பூசி 94.5% திறனுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஃபைசர் தடுப்பூசியை போல இல்லாமல், மாடெர்னா தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி குளிர் நிலையிலேயே சேமித்து வைக்க முடியும் மற்றும் ஃப்ரிட்ஜில் ஐந்து நாட்கள் வரை மட்டுமே வைக்க முடியும் எனும் நிலையில் மாடெர்னா தடுப்பூசியை 30 நாட்கள் வரை சாதாரண ஃப்ரிட்ஜிலேயே வைக்கலாம் எனவும், சாதாரண ஃப்ரீசர்களில் வைத்து நீண்டகாலத்துக்கு பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைசர் தடுப்பூசியை கடும் குளிர்நிலையில் சேமிக்க வேண்டிய தேவை இருந்ததால், அதை பணக்கார நாடுகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், மாடெர்னா தடுப்பூசி குறித்த இந்த அறிவிப்பால் அதை உலகம் முழுக்க இருக்கும் ஏழை நாடுகளும் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அறிவிப்பு வெளியான பிறகு மாடெர்னா தடுப்பூசிக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதுடன், 50 லட்சம் தடுப்பூசிகளை அந்நிறுவனத்திடம் இருந்து வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசும் தெரிவித்துள்ளது.