'வாழ்க்கை பூரா சவப்பெட்டி செய்யுறதுலேயே போயிடும்னு நினைச்சேன்'... 'கூரையை உடைத்துக் கொண்டு வந்த ஜாக்பாட்'... ஒரே நாளில் மில்லினியர்!
முகப்பு > செய்திகள் > உலகம்வாழ்க்கை யாருக்கு, எப்போது, எப்படி வேண்டுமானாலும் மாறலாம், என்பதற்கு உதாரணமாக நடந்துள்ளது இந்த சம்பவம்.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் Josua Hutagalung. 33 வயதான இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். சவப்பெட்டி செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் Josua, அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு விழுந்த ஒரு பொருளால் தனது வாழ்க்கை அடியோடு மாறும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
சம்பவத்தன்று வீட்டிலிருந்த Josua, திடீரென பயங்கர சத்தம் ஒன்றைக் கேட்டுள்ளார். உடனே சத்தம் வந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு ஏதோ கல் ஒன்று விழுந்து கிடந்துள்ளது. இதனால் வீட்டின் கூரையும் உடைத்துப் போயிருந்தது. அதை எடுக்க அவர் முயன்ற நிலையில் அது பயங்கர சூடாக இருந்தது. ஒரு வேளை உள்ளூர்வாசிகள் யாராவது கல்லை எறிந்து விட்டுச் சென்றிருக்கலாம் என Josua நினைத்த நிலையில், அப்போது தான் அது விண்கல் என்ற விஷயம் அவருக்குத் தெரிய வந்தது.
என்னுடைய வாழ்க்கை முழுவதும் சவப்பெட்டி செய்வதிலேயே போய்விடுமோ எனப் பலமுறை எண்ணி இருக்கிறேன், ஆனால் எனக்குக் கிடைத்துள்ள அதிஷ்டம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று என Josua கூறியுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் காட்டு தீ போலப் பரவிய நிலையில் பலரும் Josuaவின் வீட்டிற்கு வந்து அந்த கல்லை ஆர்வமுடன் பார்த்துச் சென்றார்கள்.
பின்னர் அந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் தெரியவந்தது. இதனிடையே அந்த விண்கல்லை அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அதை விண்கல் சேகரிப்பாளர் ஜெய் பியடெக் வாங்கினார் என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்கல்லானது 1.4 மில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.
அது இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் இருக்கும். இந்த விண்கல்லானது CM1/2 வகையைச் சார்ந்த மிகவும் அரிதான ஒன்றாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் விண்கல்லின் மேலும் 3 துண்டுகள் Josua வசித்து வரும் பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனிடையே விண்கற்கள் குடியிருப்பு பகுதியில் விழுவது என்பது அப்பூர்வமான நிகழ்வு என வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.