குண்டு சத்தத்துக்கு நடுவில் நடந்த கல்யாணம்.. உக்ரைன் காதல் ஜோடி சொன்ன உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்களை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
இந்த சூழலில் உக்ரைன் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரினா அரீவா மற்றும் சீவியடூஸ்லாவ் பர்ஸின் ஆகிய இருவரும் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள தேவாலயத்தில் நேற்று திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே வெளியில் துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை தாக்குதல்களின் சத்தம் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்த திருமணம் தொடர்பாக பேசிய அந்த தம்பதி, ‘நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. நாங்கள் எங்கள் நிலத்திற்காக போராடப் போகிறோம். ஒருவேளை நாம் இறந்துவிட்டால், அதற்கு முன் நாங்கள் ஒன்றாக இருக்க விரும்பினோம். ஏவுகணை தாக்குதல்களுக்கு மத்தியில் திருமணம் செய்தது மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இது எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்த ஜோடி முதன்முதலில் அக்டோபர் 2019-ல் கீவ் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் வரும் மே 6-ம் தேதி திருமணம் செய்து கொள்ளவும், ரஷ்யாவில் உள்ள வால்டாய் மலையின் டினீப்பர் நதிக்கரையில் உள்ள ஒரு உணவகத்தில் கொண்டாடவும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாட்டில் திடீர் போர் ஏற்பட்டதால், உடனடியாக திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
