'BABY, எனக்கு நீ, உனக்கு நான்'... 'நாம பிரியவே கூடாது என கைகளில் விலங்கிட்டுக்கொண்ட தம்பதி'... ஆனா '123 நாட்களில்' நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரியவே கூடாது என்று தங்களை விலங்கிட்டு பிணைத்துக் கொண்டது அந்த காதல் ஜோடி.

உக்ரேனின் கார்கிவ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் குட்லே. இவர் வாகன விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஒப்பனைக் கலைஞரான விக்டோரியா புஸ்டோவிடாவாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறந்த நிலையில், திடீரென இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அதாவது நாம் இருவரும் சராசரி காதல் ஜோடிகளைப் போல் இல்லாமல் சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். வேறு எவராலும் அல்ல, நம்மால் கூட நம்மைப் பிரிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தார்கள். அதன்படி இருவரும் ஒரு வினோத யோசனையைச் செயல்படுத்த முடிவு செய்தார்கள்.
கடந்த காதலர் தினத்தன்று அலெக்ஸாண்டரின் வலக்கை மற்றும் விக்டோரியாவின் இடக்கையை இணைத்து கைவிலங்கிட்டுக் கொண்டனர். இந்த செய்தி வைரலான நிலையில் பல காதல் ஜோடிகளும் அலெக்ஸாண்டர், விக்டோரியா ஜோடியின் காதலைப் பார்த்துக் கசிந்துருகிப் போனார்கள். அதன் பின்னர் எங்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றனர். ஒருவர் ஷூலேஸ் கட்ட வேண்டுமென்றால் இன்னொருவர் உதவ வேண்டும்.
ஒருவர் கைப்பேசியைப் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஸ்க்ரோல் செய்ய வேண்டும். இவ்வாறு பொது இடங்களில் இந்த தம்பதியரின் நடவடிக்கைகளைப் பார்த்த சிலரும், என்னதான் காதல் இருந்தாலும் அதற்காக இப்படியா என்ற விமர்சனத்தையும் முன்வைத்தார்கள். இவ்வாறு காதலில் மூழ்கி முத்து எடுத்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர், விக்டோரியா தம்பதியரின் காதல் ஒரு கட்டத்தில் கசந்து போனது.
இறுதியாக விலங்கை உடைத்துப் பிணைப்பிலிருந்து விலகுவது என இருவரும் இணைந்தே முடிவெடுத்தனர். பிரிவு குறித்துப் பேசிய விக்டோரியா, ''24 மணி நேரமும் கூடவே இருந்ததால், அலெக்ஸாண்டரின் கவனம் தன் மீது இல்லை என்றும், அவர் மிஸ் யூ என்னும் வார்த்தையை தன்னிடம் சொல்லவே இல்லை'' என்றும் கூறியுள்ளார். அலெக்ஸாண்டர் கூறுகையில், ''தாங்கள் ஒரே மாதிரியான விருப்பு, வெறுப்பு கொண்டவர்கள் இல்லை என்றும், தங்களுக்குள் ஒரே அலைவரிசை இல்லை'' என்றும் பிரிவுக்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
தங்களைப் பிணைத்து வைத்திருந்த காதல் காணாமல் போன நிலையில், உடைக்கப்பட்ட கைவிலங்கை ஏலம் விடப் போவதாகவும், அதில் வரும் தொகையில் ஒரு பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தரவிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர் இந்த உலகப்புகழ் காதல் ஜோடிகள்.
விலங்கே போட்டு எங்களைப் பிரிக்க முடியாது என வெளி உலகத்திற்குக் காட்டிக் கொண்டாலும், இரு மனங்கள் இணையவில்லை என்றால் பிரிவை எந்த விலங்காலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது அலெக்ஸாண்டர், விக்டோரியா தம்பதியின் காதல்.

மற்ற செய்திகள்
