‘நம் அனைவருக்கும்’... ‘அடுத்த ஆண்டு சிறப்பா இருக்கும்னு நம்புறேன்’... ‘ஏனெனில்’... 'கொரோனா தடுப்பூசி குறித்து’... ‘மத்திய அமைச்சர் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்பதால் அடுத்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று தான் நம்புவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலம் மற்றும் கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் உடல்நலத்தைப் பராமரிப்பது குறித்த எப்ஐசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட இணையதளக் கருத்தரங்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்று பேசியதாவது, “கொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் கிடைத்துவிடும். ஜூலை-ஆகஸ்ட் மாதத்துக்குள் 25-30 கோடி மக்களுக்கு தேவையான தடுப்பூசிகள் ரெடியாகிவிடும்.
தடுப்பூசியை யாருக்கு முதலில் போடுவது என்பதில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா வீரர்களாக செயல்படும் முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். அதன்பிறகு 65 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படும். பிறகு 50 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதன்பிறகு, 50 வயதுக்குட்பட்டவர்களில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும். இவை அனைத்தும் அறிவியல் பார்வையில் வல்லுநர்கள் கருத்தின்படி முடிவு செய்யப்படும். அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் என்ன செய்ய வேண்டுமென்பதை இப்போதே திட்டமிட தொடங்கிவிட்டோம்.
மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடல்நலத்தைக் கண்காணித்தல், அவர்களை தொடர்பில் வைத்திருத்தல் அவசியம். ஆதலால் 2021-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்.
கொரோனா பரவல் காலத்தில் மத்திய அரசு சில துணிச்சலான முடிவுகளை எடுத்தது. பிரதமர் மோடி ஜனதா ஊரடங்கு கொண்டுவந்து பரிசோதித்து, அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கைக் கொண்டுவந்து கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். பிரதமர் மோடியின் முயற்சிக்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அளித்தார்கள். உலக அளவில் அதிகமான அளவில் கொரோனாவிலிருந்து குணமடைந்த சதவீதம், குறைந்த இறப்பு வீதம் இந்தியாவில்தான் இருக்கிறது.
உலக அளவில் நடக்கும் கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகளோடு ஒப்பிடுகையில் நம்முடைய விஞ்ஞானிகள் சிறப்பாகச் செயல்பட்டு முன்னணியில் இருக்கிறார்கள். 2,115 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். 20 லட்சம் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளன. பிரதமர் மோடி கூறியதைப் போல் 2022 இல் இந்தியர்களுக்குப் புதிய இந்தியா கிடைக்கும். இந்தப் புதிய இந்தியாவில் மனிதநேயம், தேசியவாதம் மட்டுமே பிரதமானமாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.