30 செகண்டில் கொரோனா வைரஸை கொல்லும் ‘மவுத்வாஷ்’.. புது ஆய்வில் அசத்தல் கண்டுபிடிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்மவுத் வாஷ் 30 செக்ண்ட்டில் கொரோனா வைரஸை அழிக்கும் திறனை கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் கிங்கிடமில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், மக்கள் பயன்படுத்தும் மவுத் வாஷ் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாயை சுத்தப்படுத்த உதவும் மவுத் வாஷ் லோஷன்கள் மூலம் கொரோனாவை அழிக்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வு முதல் கட்ட முடிவுதான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மவுத் வாஷ், கொரோனா வைரஸ் உடன் தொடர்பு கொண்ட 30 நொடிகளில் கொல்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மவுத் வாஷ்களில் இருக்கும் சிபிசி எனப்படும் cetylpyridinium chloride (CPC) என்ற வேதிப்பொருள்தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மவுத் வாஷ்களில் 0.07-% க்கும் அதிகமாக சிபிசி இருந்தால் அது எளிதாக கொரோனாவை கொல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை பேராசிரியர் டேவிட் தாமஸ் என்பவர் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது. Dentyl நிறுவனத்தின் மவுத் வாஷில் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆய்வு கூடத்தில் இந்த மவுத் வாஷ் கொரோனா வைரஸை அழித்ததாக கூறப்பட்டுள்ளது.
மக்களிடம் இந்த மவுத் வாஷை வைத்து சோதனை செய்தபின்பே முழுமையான முடிவுகள் தெரிய வரும் என்றும் இந்த சோதனைகள் 2021ல் தான் முடிவு பெறும் என்றும் கார்டிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த மவுத் வாஷ் கொரோனா பரவலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என கார்டிப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களை இது குணப்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.