துருக்கியை நிலைகுலைய செய்த பூகம்பம்.. 2400 பேர் பலி.. நிவாரண பொருட்கள் & மீட்பு படையை அனுப்பும் இந்தியா.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாடே ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. இந்நிலையில் இந்தியா, துருக்கிக்கு உதவும் என அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.
Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, வீரர்கள் பாடுபட்டு வந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஆனால், அடுத்த அதிர்ச்சியாக மீண்டும் ஒரு நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய செய்தது. இந்த நடுக்கம் ரிக்டரில் 7.6 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த அதிர்வுகள் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகியவற்றிலும் உணரப்பட்டது.
துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையில் 2400 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், துருக்கியில் மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே இன்று காலை பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி துருக்கிக்கு நிச்சயம் இந்தியா உதவும் என அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஷ்ரா தலைமையில் இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அமைச்சரவை செயலாளர், உள்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம், விமான போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில், தேசிய மீட்புப் படையை சேர்ந்த 100 வீரர்கள், மருத்துவ குழு துருக்கிக்கு தனி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். மேலும், இந்த விமானத்தில் மருந்து மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளன. துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம், உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.