"அவங்க உருவில் என் அம்மாவை பார்த்தேன்".. ஐஏஎஸ் அதிகாரியை நெகிழ வைத்த இளம்பெண்.. வைரலாகும் கலெக்டரின் பதிவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆழப்புழா மாவட்ட கலெக்டரை நெகிழ செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். இந்நிலையில் இதுகுறித்து ஆட்சியர் எழுதியுள்ள பேஸ்புக் பதிவு தற்போது பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ஸ்ரீராம் வெங்கடராமன் பணிமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றுள்ளார் V. R. கிருஷ்ண தேஜா. பொதுமக்களிடத்தில் அன்போடு பழக்கக்கூடிய இவருக்கு மக்கள் மத்தியிலும் நற்பெயர் இருக்கிறது. குறிப்பாக V. R. கிருஷ்ண தேஜா ஆழப்புழாவின் கலெக்டராக பதவியேற்ற சமயம் அங்கே தென்கிழக்கு பருவமழை தீவிரமடைந்திருந்தது. அப்போது, குழந்தைகளுக்கு அவர் சோசியல் மீடியாவில் வழங்கிவந்த அன்பான அறிவுரைகள் பலரையும் நெகிழ செய்தது. இந்நிலையில், சமீபத்தில் அவரை பார்க்க இளம்பெண் ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் பேசிய கிருஷ்ணா தேஜா இளம்பெண் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
கடந்த வருடம் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த அந்த பெண், மருத்துவம் படித்து வந்திருக்கிறார். பெற்றோர் இறந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் இருந்த அந்த பெண், பொறியியல் படிக்கும் தனது தம்பியின் படிப்பு செலவுக்கு உதவ முடியுமா? எனக்கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். இதனை அறிந்த கிருஷ்ணா தேஜா உடனடியாக தொழிலதிபர் ஒருவரிடம் விபரத்தை கூறி அந்த மாணவரின் படிப்பு செலவை ஏற்க செய்திருக்கிறார்.
மேலும், தனது படிப்பு குறித்து அவர் ஒரு வார்த்தை பேசாமல், தனது தம்பியின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடாது என கோரிக்கை வைத்ததாகவும் கிருஷ்ணா தனது பேஸ்புக் பதிவில் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி கிருஷ்ணா அந்தப் பதிவில்,"அம்மாவுக்கு பிறகு அக்கா தானே நம் எல்லோருக்கும் அம்மா. அப்படியொரு அம்மாவை அன்றொரு நாள் நான் பார்த்தேன். தோட்டப்பள்ளியைச் சேர்ந்த இந்தப் பெண்ணை கலெக்டர் அலுவகத்தில் பார்ப்பது இதுவே முதல்முறை. பெற்றோரை இழந்து, தனது படிப்பும் நின்றுவிட்ட நிலையில் தனது தம்பியின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என அந்த இளம்பெண் நினைக்கிறார். இப்போது சொல்லுங்கள் அம்மாவுக்கு பிறகு அக்கா தானே நம் எல்லோருக்கும் அம்மா என்பது உண்மைதானே." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சற்று நேரத்தில் வைரலாக பரவியது. பலர் அந்த மாணவியின் படிப்புக்கும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துவந்த நிலையில்,"நிச்சயம் அதுவும் நடக்க வேண்டும். அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை" கிருஷ்ணா கமெண்ட் செய்திருக்கிறார். இந்நிலையில், ஆழப்புழா மாவட்ட ஆட்சியரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
