'அய்யோ... எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது'!.. டேனிஷ் சித்திக்கை தனியாக விட்டு ஓடிய ஆப்கன் ராணுவம்!.. தாலிபான்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கன் போரில் தாலிபான்களால் கொலை செய்யப்பட்ட இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கின் இறுதி நிமிடங்கள் குறித்து திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவரான டேனிஷ் சித்திக்கி (38), ராய்ட்ர்ஸ் (Reuters) பத்திரிகையின் மல்டிமீடியா குழுவின் தலைவர் ஆவார். 2018ம் ஆண்டு அந்த பத்திரிகையின் சார்பில் ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையை ஆவணப்படுத்தியபோது, அவர் எடுத்த புகைப்படங்களுக்காக பத்திரிகைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருதைப் பெற்றார்.
இதற்கிடையே, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்த வேளையில், அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ஆப்கன் வீரர்கள் போராடியிருக்கிறார்கள். அந்த வகையில், காந்தஹாரில் தாலிபான்களிடம் சிக்கிய ஒருவரை ஆப்கன் வீரர்கள் வெற்றிகரமாக மீட்டுத் திரும்பும்போது, அவர்களுடன் பயணித்த சித்திக் உட்பட ஆப்கன் வீரர்கள் சிலர், தாலிபான்கள் ராக்கெட் லாஞ்சர் மூலம் வீசிய குண்டு வெடிப்பு ஒன்றில் சிக்கினர்.
அதைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த நிலையில், சித்திக் உடன் இருந்த ஆப்கன் வீரர்கள் சிலர் அவரை அருகிலுள்ள மசூதி ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து புறப்படும்போது தவறுதலாக சித்திக்கை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். அதன்பிறகு சித்திக்கின் உயிரற்ற உடல்தான் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், தாலிபான்களிடம் இருந்து சித்திக்கின் உடல் மீட்கப்பட்டபின் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்களிலிருந்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, தாலிபான்கள் சித்திக்கின் உடலை கூறுபோட்டதும் அல்லாமல், அவரது உடல் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றி நசுக்கியுள்ளார்கள். அவர் கொல்லப்பட்டபின் அவரது உடல் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இப்படி கோரமாக கொல்லப்பட்டு, சித்திக்கின் உடலும் அவமதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், தாங்கள் சித்திக்கின் உடலை கண்டுபிடிக்கும்போதே அதில் காயங்கள் இருந்ததாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடைசியாக சித்திக் ஆப்கன் வீரர்களுடன் பயணிக்கும்போது தாக்கப்பட்ட நிலையில், தான் பயணித்த வாகனத்தின் அருகே குண்டு வெடிக்கும் புகைப்படத்தை, மரணிக்கும் முன் கடைசியாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.