‘இது பச்சை துரோகம்’.. ‘அமெரிக்காவுல பிறந்தேன்னு சொல்றதுக்கே வெட்கப்படுறேன்’.. US-ஐ லெஃப்ட் ரைட் வாங்கிய ஹாலிவுட் ‘லேடி சூப்பர் ஸ்டார்’..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவை பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
ஆப்கான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே 20 வருடங்களாக நடந்து வந்த போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆப்கானுக்கு உதவி வந்த அமெரிக்கா, தனது படைகளை திரும்ப பெற்றதும், தாலிபான்கள் வேகமாக ஆப்கானை கைப்பற்றிவிட்டனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆனாலும் படைகளை திரும்ப பெறும் முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie), ஆப்கான் விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமூக ஆர்வலராக செயல்பட்டு வரும் ஏஞ்சலினா ஜோலி, பல்லுயிர் பாதுகாப்பு, அகதிகளுக்கான ஐ.நா ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கியதை சாடும் வகையில் டைம்ஸ் இதழின் தலையங்க பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், ‘ஆப்கான் நாட்டின் உள்நாட்டு போர் குறித்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கண்ணோட்டம் இருக்கலாம். ஆனால் இந்த போர் இப்படி முடிந்திருக்கக் கூடாது. இதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
சமாதான பேச்சுவார்த்தையில் தாலிபான்களுக்கு சாதகமாக அமெரிக்கா ஏன் நடந்துகொண்டது என தெரியவில்லை. நம்மை நம்பிய கூட்டாளிகளை இப்படி பாதியிலேயே விட்டது பலரது தியாகத்துக்கு செய்த துரோகம். இதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஒரு அமெரிக்க குடிமகளாக இதற்காக வெட்கப்படுகிறேன். இனி அங்குள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம்’ என அமெரிக்காவை எஞ்சலினா ஜோலி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.