இந்திய ஆசிரியர் என்று தெரிந்ததும்... பார்த்து பார்த்து கவனித்து கொண்ட தாலிபான்கள்!.. தாயகம் திரும்பியவர் வெளியிட்ட அதிர்ச்சி பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய ஆசிரியர் ஒருவர், தாலிபான்கள் குறித்தான அதிர்ச்சிக்குரிய தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான இந்திய குடிமக்களில் தமல் பட்டாச்சார்யாவும் ஒருவர். மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நிம்தாவில் வசிக்கும் இவர், காபூலில் உள்ள கர்தான் சர்வதேச பள்ளியில் ஆசிரியராக ஐந்து மாதங்கள் பணியாற்றினார்.
காபூலை தாலிபான்கள் பிடிப்பதற்கு ஒரு நாள் முன்பு, தமலும், மற்றொரு இந்திய பணியாளரும் பள்ளியில் இருந்து விலகினர். பல போராட்டங்களுக்குப் பின்னர், தமல் பட்டாச்சார்யா இறுதியாக ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் இந்தியாவுக்கு வந்தடைந்த திகில் அனுபவத்தைப் பற்றி பல அதிர்ச்சிக்குரிய தகவல்களை தமல் பேசியுள்ளார். அதாவது, "தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றவுள்ளனர் என்று தொடர்ந்து செய்தி வந்தது. ஆனால், அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று எதிர்பார்த்ததை விட முன்பே வந்துவிட்டனர். நானும், எனது இந்திய சக ஊழியரும், ஆகஸ்ட் 14ம் தேதி ராஜினாமா செய்து, ஆகஸ்ட் 17 அன்று இந்தியா திரும்ப முடிவெடுத்தோம். ஆனால், எங்கள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.
தாலிபான்கள் எங்களை என்ன செய்வார்கள், வெளிநாட்டினரிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் பயந்தோம். ஆனால், தாலிபான்கள் பொறுப்பேற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு நிலைமை சீராகிவிட்டது. அவர்கள் சட்டம் ஒழுங்கை மீட்டனர். ஆனால், அது எப்போதும் ஒரு பதற்றமான தருணம். நாங்கள் கொல்லப்படுவோம் அல்லது கடத்தப்படுவோம் என்று பயந்தோம்" என்று தமல் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தாலிபான் அதிகாரிகளுக்கும், எங்கள் பள்ளி அதிகாரிகளுக்கும் இடையிலான ஒரு சுற்று சந்திப்புக்குப் பிறகு, எங்களுக்கு எதுவும் அசம்பாவிதம் நடக்காது என்பதை அறிந்து நாங்கள் அமைதியாக இருந்தோம். தாலிபான்கள் எங்களை ஒவ்வொரு நாளும் பாதுகாத்தனர். அவர்கள் எங்களுக்கு உணவு கொடுத்தனர். தண்ணீர், மருந்துகள் கொடுத்து அவர்கள் எங்களுக்கு உதவினார்கள்" என்று கூறி வியப்பை ஏற்படுத்தினார்.
மேலும், "இந்திய அரசு, வெளிவிவகார அமைச்சகம் (MEA) மற்றும் இந்திய விமானப்படை (IAF) ஆகியோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். அவர்களின் உதவியின்றி நாங்கள் ஊர் திரும்பியிருக்க முடியாது" என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
