சவூதி அரேபியாவுக்கு அடிச்ச அடுத்த ஜாக்பாட்.. இனி சொர்க்க பூமிதான்.. வெளியான திகைக்க வைக்கும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சவூதி அரேபியாவில் தங்கம் மற்றும் காப்பர் தாதுக்கள் இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பாக அமையும் என்கிறார்கள் அந்நாட்டு நிபுணர்கள்.
சவூதி அரேபியா
எண்ணெய் வளம் மிக்க பிரதேசங்களில் முக்கியமானது சவூதி அரேபியா. மத்திய கிழக்கு நாடான சவூதி முழுவதும் பாலைவனம் தான் என்றாலும் அதனை சோலைவனமாக மாற்ற அந்நாட்டு அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு இளவரசர் சல்மான் இதற்காக முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறார். விஷன் 2030 எனும் திட்டத்தின் அடிப்படையில் சவூதியை மேம்படுத்த புதிய திட்டங்கள் அங்கே முன்னெடுப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சவூதி அரேபியாவிற்கு தற்போது மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது.
தங்க தாதுக்கள்
இஸ்லாமியர்களின் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படும் மதீனாவில் தங்க மற்றும் காப்பர் தாதுக்கள் இருக்கும் இடங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மதீனா பகுதியில் உள்ள அபா அல்-ரஹா எல்லைக்குள் தங்க தாது கண்டுபிடிக்கப்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல, மதீனாவில் உள்ள வாடி அல்-ஃபரா பகுதியில் உள்ள அல்-மாடிக் பகுதியில் நான்கு இடங்களில் செப்பு தாது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கண்டுபிடிப்புகளின் மூலமாக புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்திருப்பதாக சவுதி புவியியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதன்மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம் எனவும் சவூதி அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், சவூதியின் பொருளாதார வளர்ச்சியிலும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
முதலீடு
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தளத்தில் $533 மில்லியன் முதலீடு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் சுமார் 4,000 வேலைகளை உருவாக்கும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். சவூதி அரேபியாவில் 5,300 க்கும் மேற்பட்ட கனிம இடங்கள் உள்ளன என்று சவூதி புவியியலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அப்துல்அஜிஸ் பின் லாபன் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். இதில் பல்வேறு உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பாறைகள், கட்டுமானப் பொருட்கள், அலங்கார பாறைகள் மற்றும் ரத்தினக் கற்கள் அடங்கும்.