அடேங்கப்பா, உடைஞ்சது 12,000 வருச 'மர்மம்'!!.. 10 வருஷ உழைப்புக்கு கிடைத்த விடை!!..
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலுள்ள பல இடங்களில் தொடர்ந்து தொல் பொருள் ஆய்வாளர்கள் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி நடத்தப்படும் ஆய்வுகளுக்கு மத்தியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விஷயங்கள் தொடர்பான பல அரிய தகவல்கள் வெளியே தெரிய வரும். சமீபத்தில் கூட பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மீனின் இதயம் தொடர்பான படிமம், ஆய்வு ஒன்றில் கிடைத்திருந்தது.
அது மட்டுமில்லாமல், முந்தைய காலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும், அவர்கள் தங்கி இருந்த இடம் குறித்தும் என ஏராளமான தகவல்கள் குறித்து ஆய்வாளர்கள் அவ்வப்போது அறிவிப்பார்கள்.
அந்த வகையில், தற்போது துருக்கியில் 12,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷயம் தொடர்பான தகவல், தொல்பொருள் ஆய்வாளர்கள் முடிவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சுமேரியர்கள், அசிரியர்கள், ரோமானியர்கள் உட்பட சுமார் 25 நாகரிகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாக கூறப்படும் பொங்குளு டர்லா (Boncuklu Tarla) என்ற தொல்லியல் தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கே இதற்கு முன்பு வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், ஒரு லட்சம் பாசிமணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது இங்கே ஒரு அடுக்குமாடி பொது கட்டிடம் இருந்தது தொடர்பான தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று முறை கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் முக்கிய பகுதி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை 15 பேர் கொண்ட குழுவை அகழ்வாராய்ச்சி பகுதியில் வழிநடத்தி வரும் தொல்லியல் துறை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் எர்குல் கோடாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒரு முழு கட்டிடமும் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இவை மிகப் பெரிய அளவிலான கட்டமைப்புகள் என்றும் தெரிகிறது. அதேபோல இவை குடியிருப்புக்காக பயன்படுத்தப்படாமல் தனி நபர் அல்லது குழுக்களால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், இங்கே உள்ள மக்கள் எவ்வாறு இங்கே குடியேற தொடங்கினார்கள் என்பது பற்றியும், வேட்டையாடும் வாழ்க்கையில் இருந்து உணவு உற்பத்திக்கு எப்படி மாற்றம் கண்டார்கள் என்பது பற்றியும் அறிய உதவும் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read | 72 வருஷம் முன்னாடி காணாம போன ராணுவ வீரர்.. இத்தனை நாள் கழிச்சு குடும்பத்தினருக்கு கிடைத்த பரபரப்பு தகவல்!!