பிளாஸ்டிக்கையே உணவாக உட்கொள்ளும் புழு.. சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிளாஸ்டிக்கையே உணவாக உட்கொள்ளும் புழுக்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க, ஒவ்வொரு நாடும் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது. பல நாடுகள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்துள்ளன. இருப்பினும் உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படும் பிளாட்டிக்குகள், குப்பையாக பெருங்கடலின் ஆழம் வரை சென்றுசேர்ந்துள்ளன. இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு மாபெரும் தீங்கிழைக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக்கையே உணவாக உட்கொள்ளும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி
ஜோபோபாஸ் மோரியோ (Zophobas morio) என்ற புழுக்களை மூன்று குழுக்களாக பிரித்து அவற்றுக்கு மூன்று வார காலத்திற்கு வெவ்வேறு விதமான உணவுகளை வழங்கிவந்தனர் ஆராய்ச்சியாளர்கள். இதனை சூப்பர் புழுக்கள் (superworm) எனவும் அழைக்கிறார்கள். இதில், பாலிஸ்டீரைனை உண்ட புழுக்களுக்கு எடை அதிகரித்தது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பாலிஸ்டீரைன் மற்றும் ஸ்டீரைனை அழிக்கக்கூடிய நொதி இப்புழுக்களின் குடலில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிஸ்கே," இந்த சூப்பர் புழுக்களுக்கு பாலிஸ்டீரைன் மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டது. அவை உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல் அவற்றின் எடையும் அதிகரித்திருப்பதை கண்டறிந்துள்ளோம். இவற்றின் குடலில் உள்ள நொதிகளின் மூலமாக பாலிஸ்டீரைனை எளிதில் உட்கொள்கின்றன இந்த புழுக்கள். இவை ஒரு சிறிய மறுசுழற்சி ஆலைகளை போன்று செயல்படுகிறது. அவை பாலிஸ்டீரைனை துண்டுகளாக்கி, அவற்றை தன் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அனுப்புகிறது" என்றார்.
மறுசுழற்சி
இந்த வகை புழுக்களை அதிகளவில் உருவாக்குவது சிரமான காரியம் என்றாலும், இவற்றின் குடலில் சுரக்கும் நொதியை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் இருக்கும் பாக்டீரியா மூலமாக பிளாஸ்டிக் மறுசுழற்சியை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
உலகிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்ளும் புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது, அறிவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.