'அம்மா, உங்க புருஷன் கைய கெட்டியா புடிச்சுக்கோங்க'... 'கையை பிடித்ததும் நடந்த துயரம்'.... 'வியக்கவைத்த அன்யோன்யம்'... நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் ஓஹியோ என்னும் பகுதியை சேர்ந்தவர் டிக் மீக் (Dick Meek) வயது 90. இவரது மனைவி பெயர் ஷிர்லி மீக் (Shirley Meek) வயது 87.

இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று தங்களது 70 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய நிலையில், அதனையடுத்த சில தினங்களிலேயே இருவரும் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கொலம்பஸ் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இருவரும் முதலில் தனியறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இறுதித் தருணங்களை ஒன்றாக கழிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, அவர்கள் ஒன்றாக இருக்க மருத்துவமனை ஒப்புக் கொண்ட நிலையில், இருவரும் தங்களது கைகளை கோர்த்த படியே இருந்த போது ஷிர்லியின் உயிர் பிரிந்தது.
அதன் பிறகு, ஷிர்லியின் தலையை டிக்கின் தோள் மீது வைத்த செவிலியர், 'ஷிர்லி உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்' என டிக்கிடம் தெரிவித்துள்ளார். செவிலியர் தெரிவித்த மறுநிமிடமே டிக்கின் உயிர் பிரிந்தது. பெற்றோர்களின் இழப்பால் நொறுங்கி போன மகள் டெப்பி ஹோவெல், தங்களது பெற்றோர்களின் மறைவு, கொரோனா தொற்றின் தீவிரம் என்ன என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை விழிப்புணர்வுடன் இருக்க வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார்.
டிக் மற்றும் ஷிர்லி ஆகியோருக்கு இன்னும் மூன்று நாட்களில் கொரோனா தடுப்பூசியை செலுத்த நியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
