"30,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்?".. "முன்னணி நிறுவனங்களில் 29 லட்சம் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!" - விமான போக்குவரத்து சங்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 18, 2020 01:40 PM

கொரோனாவால் போக்குவரத்து முடங்கியதை அடுத்து பெரும் பொருளாதார இழப்பை எமிரேட்ஸ் விமான நிறுவனம் சந்தித்தாகவும், இதனால் அந்நிறுவனம் ஆட்குறைப்பினை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியதை அடுத்து இதனை அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

no announcement made over job cuts amid covid19, Emirates Airlines

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலக நாடுகள் பொதுப் போக்குவரத்து முடக்கங்களை அமல்படுத்தின. இந்நிலையில் ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஊரடங்கால் முடங்கியதை அடுத்து வருமானத்தை இழந்ததால், அந்த வருமானத்தை ஈடுகட்டும் விதமாக ஏ380 விமானங்களை மேலும் சில வருடங்கள் இயக்குவதற்கும் எமிரேட்ஸ் திட்டமிட்டிருந்தது.

இதனிடையே எமிரேட்ஸ் 30 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததாக தகவல் வெளியாகின.  இந்நிலையில் இப்படி ஒரு தகவலோ, அறிவிப்போ எமிரேட்ஸ் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஊழியர்களுக்கு செல்லவில்லை என்றும், அதிகாரப்பூர்வமாக அவ்வாறான அறிவுறுத்தல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், ஆகவே 30 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியானதாக வரும் தகவல்களில் உண்மை அல்ல என்று  எமிரேட்ஸ் நிறுவனத் தரப்பின் செய்தித் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.எனினும் ஊழியர்கள் பலரையும் சம்பளமில்லாத விடுப்பு எடுக்க அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாகவும், 25% ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனாவால் 70 சதவீதம் உலகின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும், விமான நிலையங்களில் வணிகம் செய்பவர்களுக்கு ரூ.5,000 - 5,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 314 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதுமுள்ள ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் மொத்தம் 29 லட்சம் ஊழியர்கள் வரை வேலையிழப்புக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.