நியூசிலாந்து அமைச்சரவையில்... 'ஒரு சென்னைப் பெண்'!.. யார் இந்த 'பிரியங்கா ராதாகிருஷ்ணன்'?.. வியப்பூட்டும் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. அதன்பின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்.
இதுநாள்வரை, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட யாரும் நியூஸிலாந்து அரசில் அமைச்சராக இருந்தது இல்லை.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணனை அமைச்சராக நியமித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.
நியூஸிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோகமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அங்கு பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
முதல் கட்டமாக 5 அமைச்சர்களுடன் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில் ஒரு அமைச்சர் இந்தியாவைப் பூர்வீமாகக்கொண்ட, சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் கடந்த 1979-ம் ஆண்டு பிறந்தவர். கேரளாவைச் சேர்ந்த மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் சில ஆண்டுகள் இருந்த பிரியங்கா குடும்பத்தினர் அதன்பின் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர்.
சிங்கப்பூரில்தான் பிரியங்கா பள்ளிப்படிப்பைக் கற்றார். அதன்பின் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்த நிலையில், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பை பிரியங்கா முடித்தார்.
படித்து முடித்தபின் ஆக்லாந்தில் சமூகத் தொண்டு நிறுவனத்தில் பிரியங்கா பணியாற்றினார். பிரியங்காவின் கொள்ளுத்தாத்தா, கேரள மாநிலத்தில் தீவிர இடதுசாரி மற்றும் கேரள மாநிலம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியதால், அதனால் ஏற்பட்ட தாக்கத்தில் 2006-ம் ஆண்டு நியூஸிலாந்து தொழிலாளர் கட்சியில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சேர்ந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் மவுங்காகேக்கி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இருப்பினும் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் நாடாமன்றத்தில் பிரியங்கா நுழைந்தார். அமைச்சர் பதவி ஏதுமின்றி இருந்த நிலையில் 2019-ம் ஆண்டு இன விவகாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது
2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலிலும் மவுங்காகேக்கி தொகுதியில் 2-வது முறையாகப் போட்டியிட்டு பிரியங்கா தோல்வியுற்ற போதிலும், அவரை மீண்டும் அமைச்சர் பதவியில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நியமித்துள்ளார்.
இந்த முறை பிரியங்கா ராதாகிருஷ்ணன் சமூகம் மற்றும் தன்னார்வத்துறை, பன்முகத்துறை, இன விவகாரத்துறை, இளைஞர் நலத்துறை, சமூக நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் கட்சியில் பிரியங்கா இணைந்தபின், மக்களுக்காக ஏராளமான பிரச்சினைகளில், போராட்டங்களில் குரல் கொடுத்துள்ளார். குறிப்பாக குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றம், புலம்பெயர் மக்கள் தொடர்பான விவகாரத்தில் தீவிரமாக பிரியங்கா செயல்பட்டார்.
நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று நியூஸிலாந்து ஹரால்ட் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "அறிவார்ந்தவர்களையும், புதியவர்களையும் அமைச்சரவைக்குள் அழைத்து வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புதிய துறைகளில் பணிபுரியும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
அதேசமயம், புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படாவிட்டால் நிச்சயம் அதற்கேற்ற தண்டனையுடன் பதவியும் பறிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.