"போர் அடிக்குது.. மீன் பிடிக்க போவோம்".. இளைஞருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் பொழுதுபோகாமல் மீன் பிடிக்க சென்ற இளைஞருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தூண்டில்
கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியை சேர்ந்தவர் பிரேடன் ரூஸ். இவர் கடந்த வாரம் தனது விடுமுறையின் போது பொழுதுபோகாமல் இருந்துள்ளார். அப்போது மீன் பிடிக்க செல்லலாம் என முடிவெடுத்து தனது தோழி சிட்னி கோசெலென்கோ உடன் காரில் ஏறி 3 மணி நேரம் பயணித்து ஃப்ரேசர் நதிக்கு சென்றிருக்கிறார்.
கனடாவில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட காரணத்தினால் மீன்பிடிக்க அதிகளவு மக்கள் கூட்டம் இல்லாததால் இருவரும் சிறிய மீன்பிடி படகுடன் நதியில் பயணித்திருக்கிறார்கள்.
சிக்கிய மீன்
படகில் சிறிதுநேரம் செலவிட்ட பிறகு அவர்களின் தூண்டிலில் ஏதோ சிக்கியதை ரூஸ் உணர்ந்திருக்கிறார். உடனடியாக அதனை வெளியே எடுக்க அவர் முயற்சி செய்தாலும் அவரால் முடியவில்லை. மேலும், தூண்டிலில் சிக்கியது மிகப்பெரிய மீன் என்பதை அவர் உணர ஆரம்பித்திருக்கிறார்.
மீன் படகை அசைக்க துவங்கியதும், ரூஸ் நிதானமாக படகை சமநிலைபடுத்தியுள்ளார். தூண்டிலில் சிக்கிய மீன் சோர்வடையும் வரை படகை செலுத்த திட்டமிட்ட இந்த ஜோடி சுமார் 25 நிமிடங்கள் படகை இயக்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் மீன் தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்ததும் இரு படகையும் கயிறால் இணைத்து, கரைக்கு ஒட்டிச் சென்றிருக்கிறார் ரூஸ்.
ராட்சச மீன்
கரைக்கு வந்து சேர்ந்ததும் தூண்டிலில் சிக்கிய மீனை வெளியே எடுக்க முயற்சி செய்திருக்கிறது இந்த ஜோடி. அப்போதுதான் அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களது தூண்டிலில் 'ஸ்டர்ஜன்' எனப்படும் மிகப்பெரிய மீன் சிக்கியிருந்ததை அவர்கள் அறிந்ததும் சந்தோஷத்தில் இருவரும் துள்ளி குதித்திருக்கின்றனர்.
'வாழும் டைனோசர்' மீன் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீன் 8 அடி 6 அங்குலம் நீளமும் 159 கிலோ எடையும் இருந்திருக்கிறது.
சுமார் 245-208 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த வகை மீன்கள் வசித்துவந்ததை ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். அரியவகை ராட்சச மீனை பிடிக்கும் முயற்சியை வீடியோவாக எடுத்து இந்த ஜோடி வெளியிட தற்போது சமூக வலை தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.