ஒரு தடவ டேக் ஆஃப் ஆகிட்டா.. அதுக்கப்பறம் லேண்டிங்-கே கிடையாது.. வானில் பறக்க இருக்கும் சொகுசு ஹோட்டல்.. தியேட்டர், ஷாப்பிங் மால் எல்லாம் இருக்காமே..!
முகப்பு > செய்திகள் > உலகம்வானில் எப்போதும் பறந்துகொண்டிருக்கும் வகையில் சொகுசு ஹோட்டலை வடிவமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது.

விமான பயணம் பலருக்கும் பயத்தினை அளித்தாலும் அதனை விரும்பாதவர்கள் மிக சொற்பமே. மேகத்தை முத்தமிடும் வகையில் பறப்பதை யார்தான் வேண்டாம் எனச் சொல்வார்கள். ஆனால், நாம் தாங்கும் இடமே அந்தரத்தில் மிதந்தால்? அதனுள் உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்து வசதியும் இருந்தால்? இந்த கனவு திட்டத்தை நிஜமாக்க போராடிக்கொண்டிருக்கிறது ஹாஷிம் அல்கைலி என்பவருடைய நிறுவனம்.
20 எஞ்சின்கள்
வானத்தில் எப்போதும் பறக்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்த சொகுசு விமானத்தில் 20 எஞ்சின்கள் பொருத்தப்பட இருக்கின்றன. இவை அனைத்துமே அணு ஆற்றல் மூலமாக இயங்கக்கூடியவை. இந்த விமானத்திற்கு செல்லவும் இதிலிருந்து பூமிக்கு வரவும் வேறு பறக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்கிறார் இவர். ஆக, ஒருமுறை வானில் மிதக்கத் துவங்கிவிட்டால் இந்த பிரம்மாண்ட சொகுசு விமானம் மீண்டும் கீழே தரையிறங்காது. இதுவே பலரது கவனத்தையும் ஈர்க்கும் புள்ளியாகவும் இருக்கிறது.
வசதிகள்
இந்த விமான அப்பார்ட்மெண்டுக்குள் மனிதர்களுக்கு தேவையான அனைத்துமே அமைய இருக்கிறது. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள் என மினி நகரம் போல இந்த விமானம் வடிவமைக்கப்பட இருப்பதாக கூறும் ஹாஷிம் அல்கைலி, இந்த விமானத்தில் விமானி இருக்க மாட்டார் எனச் சொல்வது பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. இந்த புதிருக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்பதே இவரது வாதம். ஆனால், விமானம் முழுவதும் ஏராளமான பணியாளர்கள் இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.
இதனுள்ளே தனித்தனி படுக்கையறைகள், நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்திற்கும் அணுக்கரு இணைவு மூலமாக ஆற்றல் பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் உள்ளே திருமணங்கள் நடத்த சிறப்பு ஹால்களும் அமைய இருக்கிறதாம்.
வீடியோ
சமீபத்தில் இந்த நிறுவனம் வீடியோ ஒன்றினை வெளியிட்டது. அதில், இந்த விமானத்தின் உள்ளே அமைய இருக்கும் வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டிருந்தது. இது பலரையும் ஈர்த்தாலும், அணுக்கரு இணைவு அமைப்பில் சிறு தவறுகள் நடந்தாலும் மிகப்பெரிய சிக்கலை அது ஏற்படுத்திவிடும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுவருகிறார்கள்.
ஆனால், இதுபற்றி பேசிய ஹாஷிம் அல்கைலி," இது எதிர்காலத்திற்கான திட்டம். இதில் உள்ள சவால்களை சரிசெய்யும் நோக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். இது மிகப்பெரிய பொருட்செலவை கொண்டுள்ள திட்டமாக இருக்கும். ஒருநாள் இது சாத்தியமாகும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

மற்ற செய்திகள்
