டைட்டானிக்-கு முன்னாடியே கடல்ல மூழ்குன கப்பல்.. அச்சு பிசறாம இன்னும் அப்படியே இருக்கு.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மனித குலம் தோன்றியதில் இருந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சி ஆவதையே இலக்காக கொண்டு செயல்பட்டது. முதலில் விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பின்னர் உணவுக்கு எனத் துவங்கிய இந்தப் பயணம் பின்னர் அறிவுத்தேடலை தோற்றுவித்தது. இப்படியான ஆதிகால பயணங்கள் மூலமே பல நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வணிகம், கலாச்சாரம் வேறு மண்ணில் கால் ஊன்றவும் இப்படியான பயணங்கள் வழிகாட்டின. ஆனால், அதே நேரத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்படியான பயணங்கள் பல பெரும் விபத்தில் முடிந்த சம்பவங்களும் சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கின்றன.

அப்படியான ஒரு விபத்து தான் எண்டியூரன்ஸ் கப்பல் விபத்து. அண்டார்டிக்காவின் நிலப்பரப்பு மற்றும் அதன் புவியியல் தன்மையை அறிய ஆசைப்பட்ட சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டன் என்னும் ஆய்வாளர் 1915 ஆம் ஆண்டு எண்டியூரன்ஸ் எனப்படும் கப்பல் குழுவினரோடு பயணம் மேற்கொள்கிறார்.
சிக்கிய கப்பல்
அண்டார்டிக்கா கண்டத்தினை நெருங்க நெருங்க பனி கடுமையாகிக்கொண்டே வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் கப்பலை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பனிப்பாறையில் கப்பல் சிக்கிக்கொண்டதை உணர்ந்த ஷேக்லெட்டன் வேறுவழியின்றி அனைவரும் தப்பிச்செல்லலாம் எனக் கூறி இருக்கிறார். கப்பலில் இருந்த 28 பேரும் நெடிய மோசமான 10 மாத பயணத்திற்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்கள்.
எண்டியூரன்ஸ் 22
1915 ஆம் ஆண்டு அண்டார்டிக்காவை ஆராய கிளம்பிய சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் 100 வது ஆண்டு நினைவு தினத்தில், அவர் பயன்படுத்திய கப்பலை மீட்க முயற்சி எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஒருமாதம் கழித்து தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து இந்த கப்பலை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கிய எண்டியூரன்ஸ் 22 தங்களது பயணத்தை துவங்கி இருக்கிறார்கள்.
107 ஆண்டுகளுக்கு பிறகு
மூழ்கிய கப்பலின் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லி பதிவு செய்து இருந்த இடத்தினை நெருங்கிய எண்டியூரன்ஸ் 22 குழு ஆய்வை துவங்கியது. ஆய்வின் முடிவில் அங்கிருந்து சுமார் 4 மைல் தெற்கே எண்டியூரன்ஸ் கப்பல் கடலுக்கு அடியே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3,008 மீட்டர் ஆழத்தில் இருந்த இந்த கப்பலை வெற்றிகரமாக கண்டறிந்த குழு அதன் நிலை குறித்து ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்கிறது.
இது குறித்துப் பேசிய இந்த ஆய்வின் இயக்குனர் மென்சன் பவுண்ட், "எண்டியூரன்ஸ் கப்பலை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் நாங்கள் மூழ்கிவிட்டோம், அந்த கப்பலின் பிம்பம் அப்படியே இருக்கிறது. இதுவரை நாங்கள் பார்த்த மிகச்சிறந்த மரக்கப்பல் சிதைவு இதுதான். இந்த கப்பல் சிதைவுகள் அடிப்பரப்பில் அற்புதமான பாதுகாப்பில் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு துருவ வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் " என தெரிவித்தார்.
புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலுக்கு முன்பே கடலில் மூழ்கிப்போன எண்டியூரன்ஸ் கப்பலை 107 வருடங்களுக்கு பிறகு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதைவிட முக்கியமாக, அந்தக் கப்பல் பெருமளவு சிதைவடையாமல் இருப்பதே பலருக்கு நம்ப முடியாத ஆச்சர்யத்தை அளித்து இருக்கிறது.

மற்ற செய்திகள்
