கலைகிறதா எலான் மஸ்க்கின் 'இந்திய கனவு'?.. கரார் காட்டும் மத்திய அரசு!.. டெஸ்லா நிறுவனத்துக்கு இடியாக வந்த செய்தி!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதி குறித்தான மத்திய அரசின் நிலைப்பாட்டால் டெஸ்லா நிறுவனம் பெரும் பின்னடைவை சந்திக்கவுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கடந்த மாதம் மத்திய அரசுக்கு (போக்குவரத்து மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்கு) கடிதம் எழுதினார். மேலும், ட்விட்டர் தளத்திலும் இந்தியா இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசு, "இறக்குமதி வரியை குறைக்கும் திட்டமில்லை" என அறிவித்திருக்கிறது. கனரக மற்றும் மின் துறை இணையமைச்சர் கிருஷ்ணர் பால் குர்ஜார் நாடாளுமன்றத்தில் இதைத் தெரிவித்திருக்கிறார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கும் பரிசீலனை ஏதும் இல்லை என மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. அது, எந்த வகையிலான எரிபொருளாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டும். 40,000 டாலருக்கு கீழ் இருக்கும் நான்கு சக்கர வாகனத்துக்கு 60 சதவீத வரி செலுத்த வேண்டும். அதேபோல 40,000 டாலருக்கு மேல் இருக்கும் கார்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இறக்குமதி வரி 40 சதவீதமாக இருக்க வேண்டும் என டெஸ்லா கோரிக்கை வைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் அதே வரி விகிதம் எலெட்க்ட்ரிக் கார்களுக்கு விதிக்கப்படக் கூடாது என எலான் மஸ்க் கேட்டிருந்தார். அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்படும் கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்வதிலேயே சிக்கல்கள் உள்ளன என மஸ்க் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு இந்தியாவுக்கு என துணை நிறுவனத்தை டெஸ்லா உருவாக்கியது. மாடல் 3 காரை இந்தியாவுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. முழுமையான இறக்குமதி வரிக்கு பின்பு, அந்த காரின் விலை 60 லட்சமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மற்ற செய்திகள்
