"ஒருவேளை டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியலைனா என்கிட்ட பிளான் B இருக்கு".. எலான் மஸ்கின் ஸ்மார்ட் மூவ்.. ஆட்டம் சூடு பிடிக்குது..!
முகப்பு > செய்திகள் > உலகம்டிவிட்டர் நிறுவனத்தினை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஒருவேளை தன்னால் அந்நிறுவனத்தை வாங்க முடியாமல் போனால் தன்னிடம் வேறு ஒரு பிளான் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | 10 வருஷமா பூட்டுன வீட்டுக்குள்ள தவித்த பாட்டி.. பசி தாங்க முடியாம மண்ணை தின்ற சோகம்..!
எலான் மஸ்க்
அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். தற்போது அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்து உள்ளார் மஸ்க்.
சுதந்திரம்
ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தாலும் அதன் நிர்வாகக் குழுவில் மஸ்க் இணைய மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டிவிட்டர் நிறுவன தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் எலான் மஸ்க் "உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்துதான் நான் முதலீடு செய்தேன். மேலும் பேச்சு சுதந்திரம் ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.
எச்சரிக்கை
ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார். அதன்படி டிவிட்டரை சுமார் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். தன்னுடைய கோரிக்கையை ட்விட்டர் நிர்வாகம் ஏற்காத பட்சத்தில் தன்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார் மஸ்க்.
பிளான் B
இந்நிலையில் இன்று கனடாவின் வான்கூவர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மஸ்க் ," என்னால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியும் என்று உறுதியாக கூற இயலாது. ஆனால், என்னுடைய கோரிக்கை அந்த நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டால் என்னிடம் பிளான் B இருக்கிறது" எனப் பேசியிருக்கிறார்.
ஏற்கனவே மக்களின் பேச்சு சுதந்திரம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்த மஸ்க், தன்னால் டிவிட்டர் நிறுவனத்தை வாங்க முடியாமல் போனால் தன்னிடம் வேறு ஒரு திட்டம் இருப்பதாக அறிவித்திருப்பது தொழில்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.