எந்த நாடும் வெற்றியடையாத ஒரு செயல்.. 'துபாய் செஞ்சிருக்கு'.. பெருமிதத்தில் இளவரசர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகிலேயே காகிதம் உபயோகிக்காத முதல் நாடாக துபாய் மாறியிருப்பதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் பெருமித அறிவிப்பை அறிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் துபாயில் காகிதம் பயன்படுத்தாத டிஜிட்டல் நகரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் முறையிலும் இருந்து வந்தது. துபாயின் இந்த முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துபாயில் தனியார் துறைகளும், 45 அரசு துறைகளும் தற்போது காகிதமற்றவையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் துபாய் உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை பெற்றுள்ளது. எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'துபாய் இப்போது எந்த நாடும் வெற்றியடையாத ஒரு செயலை செய்துள்ளது.
இந்த சாதனை அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் முன்மாதிரியாக இருக்கும். அதோடு புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணமாக இருக்கும்.
மேலும், துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும். இத்திட்டத்தின் மூலம், துபாய் அரசாங்கத்திற்கு 2650 கோடி ரூபாய் (350 மில்லியன் அமெரிக்க டாலர்) சேமிக்கப்படுவதுடன், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் மிச்சமாகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தங்கள் நடைமுறைகள் மற்றும் குடிமக்களின் அடையாளங்களை உள்ளடக்கிய அரசாங்க செயல்பாட்டை பெரிய அளவில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், சைபர் மற்றும் ஹேக்கிங் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளது தரவுகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியது குறிப்பிடத்தக்கது.