"இதை திறக்கறவங்களுக்கு சாபம் விட்ருவாரு".. ரகசிய கல்லறையில் இருந்த எச்சரிக்கை பலகை.. நடுங்கிப்போன ஆராய்ச்சியாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இஸ்ரேல் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையின் மேலே எழுதப்பட்டிருந்த வாசகங்கள் ஆராய்ச்சியாளர்களை நடுங்க வைத்திருக்கிறது.

இஸ்ரேலின் பீட் ஷியாரிமில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குகைக்கு உள்ளே சிறிய சிறிய குகைகள் இருப்பதை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அந்த குகைகளில் ஒன்றில் தான் இந்த எச்சரிக்கை பலகையுடன் கூடிய கல்லறை இருந்திருக்கிறது. இது 1800 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கலாம் என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.
எச்சரிக்கை
இந்த கல்லறை மேலே சிவப்பு வர்ணத்தில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதில்,"யாகோவ் ஹா'கர் இந்த கல்லறையைத் திறக்கும் எவரையும் சபிப்பதாக சபதம் செய்கிறார், அதனால் யாரும் அதைத் திறக்க மாட்டார்கள். 60 வயது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகங்களை கண்டவுடன் திகைத்துப்போன அதிகாரிகள், இறந்தவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக கல்லறையை சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர்.
இதுகுறித்துப் பேசிய ஹைஃபா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆதி எர்லிச், "இறந்து போனவர் தனது கல்லறை எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும் என விரும்பியுள்ளார். அந்த காலத்தில் பழைய கல்லறைகளை மீண்டும் சிலர் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற எச்சரிக்கையை அவர் விடுத்திருக்கலாம். இப்போதைக்கு அந்த கல்லறையை ஆய்வு செய்யும் திட்டம் எங்களுக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.
பழமையான கல்வெட்டு
இஸ்ரேலில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய கல்லறை இருந்த இடத்தில் பல்வேறு குகைகள் காணப்படுகின்றன. இங்கே கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் ரோமானிய காலத்தின் பிற்பகுதியில் அல்லது பைசண்டைன் காலத்தின் தொடக்கத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. இவை உலகின் பழங்கால கல்வெட்டுகளில் ஒன்றாக UNESCO அமைப்பு சான்றளித்துள்ளது.
இருப்பினும் இந்த கல்லறை பல்வேறு குழப்பங்களை ஆராய்ச்சியாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் யாக்கோவ் ஹாகர் என்ற பெயரின் பொருள் யாக்கோபு மதம் மாறியவர் (யூத மதத்திற்கு மாறியவர்) என்பதாகும். அப்படியானால் அவர் எந்த மதத்திலிருந்து யூத மதத்திற்கு மாறியிருப்பார் என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதுபற்றி பேராசிரியர் எர்லிச் கூறுகையில்,"இந்த கல்வெட்டு ரோமானிய காலத்தின் பிற்பகுதியில் அல்லது பைசண்டைன் காலத்தின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஜெருசலேமில் கிபி முதல் நூற்றாண்டிலும், மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் ரோமில் இறுதி சடங்குகளில் மதம் மாற்றப்பட்ட கல்வெட்டுகளும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பெய்ட் ஷியாரிமிலிருந்து இதுபோன்ற கல்வெட்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இஸ்ரேலில் சிவப்பு வர்ணத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை வாசகங்களை கொண்டிருக்கும் கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது குறித்து பலரும் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

மற்ற செய்திகள்
