பார்வை இழக்க போகும் பிள்ளைகள்..? .. "அதற்குள் உலகம் முழுவதும் சுற்றுலா போயிடணும்".. கனடா குடும்பத்தின் கலங்க வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவை சேர்ந்த தம்பதி, தனது குடும்பத்தினருடன் உலகம் முழுவதும் சுற்றி பார்த்து வரும் நிலையில், இதன் பின்னால் உள்ள காரணம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
கனடா நாட்டைச் சேர்ந்தவர் செபாஸ்டியன் பெல்டியர். இவரது மனைவியின் பெயர் எடித் லேமே. இந்த தம்பதியருக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோர் அடங்கும்.
அப்படி ஒரு சூழ்நிலையில், சமீப காலமாக தனது மனைவி எடித் மற்றும் குழந்தைகளுடன் உலக சுற்றுலா சென்று வருகிறார் செபாஸ்டியன்.
இதற்கு காரணம், இந்த தம்பதியரின் மூன்று குழந்தைகளுக்கு உருவாகி உள்ள ஒரு அரிய வகை குறைபாடு தான். ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடு உள்ள காரணத்தினால் செபாஸ்டியனின் குழந்தைகள் மூன்று பேரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் பார்வையை முற்றிலும் இழந்து விடுவார்கள். இந்த பாதிப்பை குணமாக்க இதுவரை எந்த சிகிச்சைகளும் முறையாக இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
செபாஸ்டியன் - எடித் ஆகியோரின் மூத்த குழந்தையான மியாவுக்கு மூன்று வயதாக இருந்த போது இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மற்ற குழந்தைகளில் கொலின், லாரண்ட் ஆகியோருக்கும் இந்த பாதிப்பு உள்ளது. தற்போது 9 வயதாக இருக்கும் லியோ என்பவருக்கு மட்டும் இந்த பாதிப்பு இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மரபணு ரீதியாக இந்த பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கும் நிலையில், இதற்கு உரிய சிகிச்சையும் இல்லை என்பதால், செபாஸ்டியன் - எடித் ஆகியோரின் மூன்று குழந்தைகள் தங்களின் மிடில் ஏஜ் பிராயத்தில் முற்றிலும் பார்வையை இழந்து விடுவார்கள் என தெரிகிறது. இதனால், அதற்கு முன்பாகவே தங்களின் குழந்தைகள் அனைவரையும் உலக சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர் எலிசபெத் மற்றும் எடித் ஆகியோர்.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் பயணத்தை தொடங்கிய இவர்கள், பல நாடுகளுக்கு இதுவரை சுற்றுலா சென்றுள்ளார்கள். இதற்காக கொரோனா தொற்று பேரிடர் முன்பாகவே பணத்தையும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கவும் தொடங்கி உள்ளனர். அடுத்த ஆறு மாதங்கள் வரை தொடர்ந்து சுற்றுலா சென்று கழித்த பின்னர் வீடு திரும்பவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், தங்களின் குழந்தைகளின் நினைவுகளை மிகவும் அழகான படங்களால் நிரப்ப போவதாகவும் செபாஸ்டியன் - எடித் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.