
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது ஏன்? சில நிமிடங்களில் எடுக்கப்பட்ட முடிவு.. விளக்கம் அளித்த அஷ்ரஃப் கனி
முகப்பு > செய்திகள் > உலகம்காபூல்: நாட்டு மக்களை கைவிட்டுவிட்டு உயிருக்கு பயந்து தப்பி ஓடியதாகவும், விமானத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி சென்றதாகவும் அஷ்ரஃப் கனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் ஒட்டுமொத்த நாடும் தங்கள் வசமானதாக அறிவித்தனர்.
கடுமையான விமர்சனம்:
இந்த நிலையில் தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கனி தனது மனைவியுடன் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினார். அவர் விமானத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. நாட்டு மக்களை கைவிட்டுவிட்டு உயிருக்கு பயந்து தப்பி ஓடியதாக அஷ்ரஃப் கனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
வெளியேறியது ஏன்?
இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது ஏன் என்பது குறித்து அஷ்ரஃப் கனி தற்போது விளக்கம் அளித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வசித்து வரும் அவர் பிரபல தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இதுகுறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.
திடீர் முடிவு:
இதுகுறித்து அவர் கூறும்போது “ஆகஸ்டு 15-ம் தேதி அன்று கண் முழித்தபோது, ஆப்கானிஸ்தானில் அதுதான் தன்னுடைய கடைசி நாளாக இருக்க போகிறது என்ற எந்தக் குறிப்பும் தயாரிக்கப்படவில்லை. தாலிபான்கள் நெருங்கி விட்ட காரணத்தினால், காபூலில் இருந்து வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட்டபோதுதான், நாங்கள் ஆப்கானை விட்டு வெளியேறுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே இது உண்மையில் திடீரென நடந்தது தான்” என்று கூறியுள்ளார்.
எனக்கு பணம் எதற்கு?
அதுமட்டுமல்லாமல், பணத்தை எடுத்து சென்றதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர் “நான் அழுத்தம் திருத்தமாக இதை கூற விரும்புகிறேன். நான் எங்கள் நாட்டிலிருந்து எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பணத்தை வைத்து நான் என்ன செய்வது?” என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
