உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பலரும் இன்னலுக்கு ஆளாகினர். அதேபோல் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சூழலில் வரும் 2022-ம் ஆண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் பலரும் தற்போதே கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் நியூசிலாந்து நாடு முதல் நாடாக புத்தாண்டை கொண்டாடியுள்ளது. பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும் பொழுது மறுமுனையில் இரவாக இருக்கும். அந்த வகையில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு, உலகின் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. அதனால் அங்கு புத்தாண்டு வான வேடிக்கையுடன் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறக்க உள்ளது. ஆனால் நியூசிலாந்தில் இந்திய நேரப்படி இன்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.