"500 வருஷம் இருக்கும்".. கப்பலில் இருந்த ஆய்வாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த உயிரினம்.. செக் பண்ணப்போ தெரியவந்த ஆச்சர்யமான உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கடல் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களை அதிர வைத்திருக்கிறது ராட்சத சுறா மீன் ஒன்று. இந்த சுறாவின் வரலாற்றை ஆய்வாளர்கள் வெளியிட்டிருப்பது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.

கடல் எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சர்யமானதாகவே இருந்து வருகிறது. பழங்காலம் முதலே, கடல் பற்றிய பல ஆய்வுகளில் மனிதர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவி இருக்கும் கடல்கள் புதுப்புது தகவல்களை மனிதர்களுக்கு அளித்துக்கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் மத்திய அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த உயிரியல் நிபுணர்கள், கடலில் தென்பட்ட சுறாவை பார்த்ததும் பிரம்மித்துப் போயிருக்கிறார்கள்.
ஆராய்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மத்திய அமெரிக்காவில் பெலிஸ் கடற்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்திருக்கிறார் தேவன்ஷி கசானா. இவர் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். பெலிஸ் கடற்பகுதியில் உலவும் டைகர் சுறா மீன்களை பிடித்து அவற்றின் உடலில் டிராக்கிங் கருவியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், கப்பலின் ஓரத்தில் வித்தியாசமான உடல் அமைப்புடன் ஒரு உயிரினம் வருவதை பார்த்திருக்கிறார்.
உடனடியாக கப்பலை அதன் அருகில் திருப்பியுள்ளனர் உதவியாளர்கள். அப்போது தான் தேவன்ஷி கசானா அந்த கிரீன்லாந்து சுறாவை பார்த்திருக்கிறார். உடனடியாக அதனை புகைப்படம் எடுத்து தன்னுடைய ஆலோசனையாளருக்கு அனுப்பியுள்ளார் காசானா. அவர் அது ஒரு கிரீன்லாந்து சுறா தான் என்பதை உறுதி செய்திருக்கிறார். உடனடியாக இந்த தகவல் பல்கலைக்கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இவ்வளவு ஆச்சர்யப்படும் அளவுக்கு அதில் என்ன இருக்கிறது?
கிரீன்லாந்து சுறா
முதலாவதாக கிரீன்லாந்து சுறாக்கள் ஐஸ் கட்டிகளாக உறைந்த ஆர்டிக் கடலில் வசிப்பவை. ஆகையால் வெப்பமான கரீபியன் கடல்பகுதிக்கு இந்த சுறா எப்படி வந்தது என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களிடையே எழுந்திருக்கிறது. அடுத்தபடியாக இந்த வகை சுறாக்கள் குறைந்தபட்சம் 250 முதல் 500 ஆண்டுகள் வரையில் உயிர் வாழும் என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.
இதனிடையே இது கிரீன்லாந்து சுறாவிற்கும் பசிபிக் ஸ்லீப்பர் சுறாவிற்கும் இடையே ஒரு கலப்பினமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி பேசிய கசானா,"ஆரம்பத்தில் இது வித்தியாசமான கடல் உயிரினமோ என்று நினைத்தேன். அதன் பிறகு தான் அது கிரீன்லாந்து சுறா என்பது தெரியவந்தது. இருப்பினும் என்னுடைய ஆலோசனையாளரிடம் இதனை உறுதி செய்துகொண்டேன்" என்றார். இதனிடையே இந்த சுறாமீனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
