7 'கொரோனா' நோயாளிங்க... சில நிமிடங்கள்ல, ஒவ்வொருத்தரா 'இறந்து' போயிட்டாங்க! - 'ICU' வார்டில், திடீரென 'தீ' பற்றிய அதிர்ச்சி 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பாலான நாடுகளை கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், எகிப்து நாட்டில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா என்னும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணையின் முதற்கட்ட அறிக்கையில் அவசர சிகிச்சை அறையில் இருந்த ஏர் கண்டிஷனர் மூலம் இந்த தீக்கசிவு ஏற்பட்டது தெரிய வந்தது. ஏர் கண்டிஷனரில் கோளாறு ஏற்பட்டு தீ ஏற்பட்ட நிலையில் அதனை தடுக்க அங்கிருந்த செவிலியர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியுள்ளது.
சிறிதொரு நொடிகளில் தீ வேகமாக பரவ, அங்கிருந்தவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளின் குறிப்பிட்ட பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வேகமாக பரவவில்லை. கடந்த மாதம் இதே போன்று எகிப்து நாட்டில் கைரோ என்னும் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலும் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
எகிப்து நாட்டில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அங்குள்ள மருத்துவமனைகளில் சரியான மருத்துவ மற்ற சிகிச்சை வசதி, மருத்துவ உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் தட்டுப்பாடு உள்ளதாக மருத்துவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அங்கு நடந்த இரண்டு தீ விபத்துக்களும் எகிப்து நாட்டின் மருத்துவமனை வசதிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒரு பக்கம் எகிப்து நாட்டில் கொரோனா சுழன்றடிக்க, இன்னொரு பக்கம் இது மாதிரியான தீ விபத்துகள் அங்குள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெறுவது நிலைமையை மேலும் ஆபத்தாக்கியுள்ளது. எகிப்தில் இதுவரை சுமார் 66 ஆயிரம் பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 2,800 பேர் வரை பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.