அண்டார்டிகாவில் இருக்கும் தபால் நிலையத்தில் வேலை.. செலெக்ட்டான 4 பெண்கள்.. அவங்களுக்கு போட்ட கண்டீஷனை கேட்டா தான் திக்குன்னு இருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்குளிர் நிரம்பிய கண்டமான அண்டார்டிகாவில் இருக்கும் தபால் நிலையத்தில் பணியாற்ற 4 பெண்கள் தேர்வாகியுள்ளனர். அங்கே அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் மிக கடுமையானவையாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
உலகின் தென்கோடியில் அமைந்துள்ள குளிர் நிரம்பிய கண்டம் தான் அண்டார்டிக்கா. இங்கே நிரந்தர குடியிருப்பு என்று எதுவும் இல்லை. பல்வேறு நாடுகளும் இந்த குளிர் பாலைவனத்தில் ஆய்வுக்கூடங்களை அமைத்துள்ளன. உலகின் மிகவும் குளிரான பகுதியில் அமைந்துள்ள இந்த கண்டத்தில் போலார் கரடிகள் மற்றும் பென்குவின்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அதுபோல அண்டார்டிக்காவை சுற்றி பல்வேறு தீவு கூட்டங்கள் உள்ளன. இப்படியான ஒரு இடத்தில் தபால் நிலையம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். அண்டார்டிகாவின் கவுடியர் தீவில் இருக்கும் போர்ட் லாக்ராய்-ல் இந்த தபால் நிலையம் அமைந்திருக்கிறது. இதனை பெங்குவின் போஸ்ட் ஆபீஸ் என்றும் அழைக்கிறார்கள்.
பெங்குவின் போஸ்ட் ஆபீஸ்
1944 ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்தது ஐக்கிய ராஜ்யம். அதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு இங்கே ஒரு போஸ்ட் ஆபிஸையும் திறந்திருக்கிறது அந்த நாடு. இதனை ஐக்கிய ராஜ்ய - அண்டார்டிகா புராதான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. அண்டார்டிகாவின் அருகே அமைந்துள்ள கூடியர் தீவில் இருக்கும் இந்த போஸ்ட் ஆபீசில் மியூசியம் ஒன்றும் சிறிய பரிசுப் பொருள் விற்பனையகமும் இருக்கிறது.
4 பெண்கள்
இந்நிலையில் இந்த தபால் நிலையத்தில் கிளேர் பாலன்டைன், மைரி ஹில்டன், நடாலி கார்பெட் மற்றும் லூசி புரூஸோன் ஆகிய நான்கு பெண்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இவர்கள் அடுத்த 5மாதத்திற்கு அங்கே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான மைரி ஹில்டன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு உயிரியலாளர் ஆவார். இவர் இங்குள்ள பென்குயின்களை கண்காணிக்கும் பொறுப்பாளராக இருப்பார்.
லண்டனைச் சேர்ந்த 40 வயதான லூசி புரூஸோன், ஆர்க்டிக் பயணத்தில் தலைமை விஞ்ஞானியாக மூன்று மாதங்கள் செலவிட்டுள்ளார். இவர் இந்தமுறை குழுவை ஒருங்கிணைக்கவும், இங்குவரும் கப்பல்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கவும் இருக்கிறார். லிங்கன்ஷையரைச் சேர்ந்த 23 வயதான கிளேர் பாலன்டைன் இங்கு இருக்கும் தபால் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்ற இருக்கிறார். இங்கிருந்து 100 நாடுகளுக்கு தபால்களை அனுப்பும் பணியினை இவர் மேற்கொள்ள இருக்கிறார். 31 வயதான கார்பெட் இங்கு உள்ள பரிசு பொருட்கள் விற்பனையகத்தை கவனித்துக்கொள்ள இருக்கிறார். இவர்களுக்கு வழிகாட்ட இந்த இடத்தில் ஏற்கனவே அனுபவம் பெற்ற விக்கி இங்கிலிஸ் நியமிக்கப்பட்டுளளார். இவர் 10 வாரங்களுக்கு அங்கே தங்கியிருப்பார்.
சவால்கள்
இந்த இடத்தில் பணியாற்றுவது ரொம்பவே சிரமமான காரியம். உறை குளிர் ஒருபக்கம் என்றால் இங்கே ஒரு பெட்ரூம் கொண்ட சிறிய படுக்கையறை மட்டுமே உள்ளது. கழிப்பிட வசதி இந்த கட்டிடத்திற்கு வெளியே அமைந்திருக்கிறது. அதையும் தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். அதுமட்டும் அல்லாமல் இங்கே குளியலறையை கிடையாதாம். சுற்றுலா கப்பல்கள் வந்தால், அதில் தான் குளித்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் 2 வாரங்கள் அளவிற்கு குளிக்காமல் இருக்கவும் நேரிடலாம். இவையெல்லாம் தாண்டி இங்கு இன்டர்நெட் வசதிகள் கிடையாது. சாட்டிலைட் போன்கள் தான். அதுவும் எப்போதாவது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை உடல்நிலை பாதித்தால் மருத்துவனைக்கு செல்ல 7 நாட்கள் பயணம் செய்யவேண்டும். இப்படி ஒரு சவாலான காரியத்தை தான் 4 பெண்களும் அடுத்த 5 மாதங்களுக்கு செய்ய இருக்கிறார்கள்.