வீடுகட்ட குழி தோண்டுனப்போ கிடைச்ச புதையல்.. ஆத்தாடி இதெல்லாம் அவரோடதா?.. வெளிவந்த 1000 வருஷ மர்மம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து நாட்டில் வீடு கட்ட குழி தோண்டும்போது கிடைத்த புதையல் பல ஆச்சர்ய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதனால் ஆராய்ச்சியாளர்களே ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Also Read | X-Ray தானே எடுத்துட்டா போச்சு.. ஹாஸ்பிட்டல் ஊழியர்களையே ஆச்சர்யப்பட வச்ச யானை.. கியூட்டான வீடியோ..!
இங்கிலாந்தில் உள்ள நார்தாம்ப்டன்ஷையரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வீடு கட்டும் பணியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு. அப்போது, மண்ணுக்கடியில் வித்தியாசமான பொருட்கள் தென்பட்டதையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போது, உடனடியாக அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பூமிக்கடியில் இருந்த கல்லறை ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர். பின்னர் அதில் இருந்து நெக்லஸ் உள்ளிட்ட பல பொருட்களை ஆய்வாளர்கள் தோண்டி எடுத்தனர். இவை ஆய்வுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த நெக்லஸ் கிபி 630 - 670 காலகட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடையதாக இருக்கலாம் என லண்டன் தொல்பொருள் அருங்காட்சியகத்தின் (MOLA) நிபுணர்கள் தற்போது தெரிவித்திருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த நெக்லஸ் மெர்சியா ராஜ்யத்தை சேர்ந்த உயர் அதிகாரம் கொண்ட பெண்மணி ஒருவருடையதாக இருக்கலாம் எனவும் ஆராச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த புதையலுடன் பொக்கிஷ கற்கள் சிலவும் கிடைத்ததாகவும் அவை, இடைக்கால வரலாற்றின் ஆரம்ப காலத்தை சேர்ந்தவை என்றும் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். ரோமானிய நாணயங்கள், தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பொருத்தப்பட்ட நெக்லஸ் என கிடைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் பணக்கார மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்த ஒரு பெண்ணுடையதாக இருந்திருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட குழுவை வழிநடத்திய MOLA தள மேற்பார்வையாளர் லெவெண்டே பென்சி பலாஸ் (Levente-Bence Balazs) இதுபற்றி பேசுகையில்,“மண்ணில் இருந்து தங்கத்தின் முதல் பளபளப்புகள் வெளிவரத் தொடங்கியபோது இது குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை நாங்கள் அறிந்தோம். இருப்பினும், இது எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை நாங்கள் உணரவில்லை. புதைக்கப்பட்ட பெண்ணுடைய வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலம் குறித்து கிடைத்திருக்கும் பொருட்கள் வழியாக அறிந்து வருகிறோம். நிச்சயம் இது ஒரு பேரனுபவம். வாழ்வில் ஒருமுறை மட்டுமே இப்படியான அனுபவம் கிடைக்கும்" என்றார்.
மேலும், இந்த கல்லறையில் வித்தியாசமான சிலுவை ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவற்றில் மனித முகங்கள் வெள்ளியில் வார்க்கப்பட்டிருந்ததாகவும், இப்படியான ஒன்று இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆய்வு வரலாற்றின் பல பக்கங்களில் மறைந்துள்ள கேள்விகளுக்கு விடையளிக்கும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
