'ஏன் அதிகமாக தண்ணீர் பிடிக்கிறீங்க'... 'தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்'... 'குடும்பமே சேர்ந்து பதறவைத்த சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 06, 2019 08:05 PM

தண்ணீர் பிரச்சினையில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

youth murdered by one family due to drinking issue

தஞ்சை அருகே உள்ள விளார் வடக்குக் காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஆனந்தபாபு. 33 வயதான இவர் ஒரு சமூக ஆர்வலர். மேலும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் திறந்துவிடும் பணியில் இருந்தார். ஒன்றிய அலுவலகம் மூலம், ஆனந்தபாபு லாரியில் குடிநீர் விநியோகம் செய்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன்கள் 3 பேரும் சேர்ந்து, 250 லிட்டர் சிண்டெக்ஸ் கேன்களில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துள்ளனர்.

இதைப் பார்த்த ஆனந்தபாபு தற்போது தண்ணீர் பிரச்சினை இருக்கும் நிலையில், இப்படி தொட்டியில் தண்ணீர் பிடிக்கலாமா எனக் கூறி அவர்களை தட்டிக் கேட்டதாகத் தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து, உருட்டு கட்டையால் ஆனந்தபாபுவை தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதைத் தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஆனந்தபாபு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தர்மராஜ் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தபாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மராஜ் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது கொலை வழக்காக மாற்றி வழக்குபதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். தண்ணீர் பிரச்சினையில் சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDERED #WATERSCARCITY