‘மகளின் திருமணத்திற்காக தந்தை செய்த காரியம்..’ ‘சரியான தண்டனை’ அளித்த வனத்துறை..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 06, 2019 07:43 PM

மகாராஷ்டிராவில் மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாததால் மரங்களை வெட்டிய நபருக்கு அதற்கு தகுந்தவாறு தண்டனை கொடுத்துள்ளது வனத்துறை.

man cuts down 860 trees for daughters marriage

பட்லாபூர் பகுதியைச் சேர்ந்த தஸ்ரத் கார்டே என்பவர் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள 860 மரங்களை இரண்டே நாட்களில் இயந்திரத்தின் உதவியுடன் வெட்டியுள்ளார். இதைப் பற்றி தகவலறிந்து வந்து பார்வையிட்ட வனத்துறையினர் மொத்த இடமும் காலியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மரங்கள் இருந்த இடம் அவரது சொந்த இடம்தான் என்றாலும் மரங்களை வெட்ட அவர் முறையாக அனுமதி பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் வெட்டிய மரங்களில் பலவும் மிக வயது குறைவானவை. மகாராஷ்டிரா மாநிலத்தின் மரம் அழிப்பு தடுப்புச் சட்டம் 1964ன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பிறகு அவரது செயலுக்கு தண்டனையாக நான்கு மாதங்களுக்குள் வெட்டியதை விட இரண்டு மடங்கு மரங்களை அதே இடத்தில் நட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது வனத்துறை. அப்படி செய்ய மறுத்தால் அதற்கான செலவை அவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளது.

இதற்கு அவர் தரப்பில், “40 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தில் நடைபெறப்போகும் முதல் திருமணம். அதை நடத்த பணத்திற்கு வேறு வழி தெரியாததால் தான் மரத்தை வெட்ட நேர்ந்தது. அது குற்றம் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அபராதம் செலுத்த பணம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #MAHARASHTRA