முதல்வர் ஐயா.. காப்பாத்துங்க.. உயிரை தான் மாய்ச்சிக்கணும்! கதறி அழும் பெண்! - என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமாரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. தனது இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்துவரும் இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
முதலமைச்சர் அய்யா.. நீங்க தான் காப்பாத்தணும் என கலங்கிய கண்களுடன் குறிப்பிடும் லலிதாவிற்கு அதே முட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருடன் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணமாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகச் சொல்லப்படும் பாபு மற்றும் அவர் தற்போது தொடர்பில் உள்ள பெண் ஆகிய இருவரும் லலிதாவிற்கு தொல்லை கொடுத்துவந்துள்ளனர்.
பாதை மாறிய கணவன்
லலிதா - பாபு தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், வேறொரு பெண்ணுடன் பாபு தற்போது வசித்துவருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பாபுவுடன் தற்போது பழகிவரும் பெண்ணுடைய உறவினர்கள் லலிதாவின் வீட்டிற்குச் சென்று, அவரை தாக்கியது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த பொருட்களையும் கீழே போட்டு உடைத்திருக்கிறார்கள். மேலும், சொந்த வீட்டில் வசித்துவரும் லலிதாவை வீட்டை விட்டு வெளியேறும்படியும் அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
புகார்
இந்த தாக்குதலினால் காயமடைந்த லலிதா குளச்சல் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் குளச்சலில் உள்ள மகளிர் காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்திருக்கிறார். இருப்பினும் பலன் ஏதும் கிடைக்காததால் தன்னுடைய கவலைகளை கோரிக்கையாக வெளியிட்டிருக்கிறார் லலிதா.
தனது கோரிக்கையில் லலிதா," திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்த பின்னர் என்னுடைய கணவர் என்னையும் எங்களுடைய பிள்ளைகளையும் விட்டுவிட்டுச் சென்றுவிட்டர், முதலமைச்சர் இதில் தலையிட்டு எனக்கு நீதிகிடைக்கும்படி செய்யவேண்டும். உதவி கிடைக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வதைத்தவிர வேறு வழியில்லை" என கண்ணீருடன் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.