யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது..? நீதிபதி சரமாரி கேள்வி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாட்டை துரைமுருகன், யூடியூபில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் கொடுத்து நிபந்தனை ஜாமீனில் சாட்டை துரைமுருகன் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் சாட்டை துரைமுருகன் மீண்டும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசி வந்தார்.. இதன்பேரில் மீண்டும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, ‘அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாட்டை துரைமுருகன் என்ன தொழில் செய்கிறார்? யூடியூப்பில் இதுபோன்ற செய்திகள் வெளியிடுவதன் மூலம் அவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும் யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? வங்கிக் கொள்ளை போன்ற விபரங்களை யூடியூப் மூலம் கற்றுக் கொடுத்து கொண்டு இருப்பதை எவ்வாறு ஆதரித்து வருகிறார்கள்? இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
யூடியூப் தவறான வீடியோக்களையும் வெளியிடுமா? வேறு மாநிலத்தில் இருந்து தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டே இருந்தால் யூடியூப்பை ஏன் தடை செய்யக்கூடாது? யூடியூபில் நல்ல விஷயங்கள் உள்ளது. ஆனால் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரித்ததாகவும், நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகவும், கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை எவ்வாறு தடுக்க போகிறோம்?
யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

மற்ற செய்திகள்
