"துணி காய வச்சிருக்கீங்களா?".. வித்தியாசமாக மழை அப்டேட் கொடுத்த வெதர்மேன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த வித்தியாசமான மழை அப்டேட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது.
தற்போது வட இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவி வருகிறது. இதன் கரணமாகவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இந்த சூழற்சி புயலாக மாற வாய்ப்பு இல்லை எனினும் தென்மண்டலங்களில் இதன் காரணமாக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்திருக்கும் மழை அப்டேட் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,"சென்னை மற்றும் KTCC பெல்ட்டை (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் கடலூர்) பொறுத்தவரையில் கடலில் இருந்து உட்புறம் வரை உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து காய வைத்த துணியை இன்னும் 60 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார் பிரதீப். அதாவது இன்னும் சில மணிநேரங்களுக்கு வெயில் இருக்கலாம் என்பதை பகடியாக அவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.
நாளை (நவம்பர் 5) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.