
ஒரே நாளில் ‘சென்னையை’ வெள்ளக்காடாக்கிய மழை.. இன்னும் ‘எத்தனை’ நாளைக்கு இருக்கு..? வானிலை மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று நண்பகல் 1 மணியளவில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது.
அதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பழம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக்நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்ஆர்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்த தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் நகரின் பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், அவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
