5 நாள் அடைமழை வெளுத்து வாங்கப்போகுது.. அதுவும் இந்த மாவட்டங்கள்ல கனமழை இருக்குமாம்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், இது அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 நாட்களுக்கு
வரும் 24 முதல் 26 வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீன்வர்களுக்கு எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றுமுதல் வரும் 24 ஆம் தேதிவரையில் மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதேபோல கேரள - கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 40 - 50 கிலோமிட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் இந்நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது.