'50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 23, 2020 10:25 PM

தமிழ்நாட்டின் பின்னலாடை நகரம் என அழைக்கப்படும் திருப்பூர் விரைவில் மருத்துவ ஆடை தயாரிப்பிலும் தனது தடத்தை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான வேலைகளில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முனைப்பு காட்ட ஆரம்பித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்றுமதி மூலமாக 26 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டிய திருப்பூர் மாவட்டம் இந்த வருடம் கொரோனாவால் பலத்த அடிவாங்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் துறைமுகங்களில் தேங்கியிருக்கிறது.

Due to Demand, Tirupur get Rs 50,000 crore Business Opportunity?

இதனால் அதற்குரிய பணத்தை தர முடியாமல் பின்னலாடை நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவில் திருப்பூரில் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலை மாற ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கணித்துள்ளனர். எனினும் தற்போது மருத்துவ உடைகளுக்கு எக்கச்சக்க டிமாண்ட் ஏற்பட்டு இருப்பதால் திருப்பூருக்கு அதில் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய சுமார் 3 மாதங்கள் வரை ஆகலாம்.

இந்த நிலையில் மத்திய அரசு தற்போது மருத்துவ ஆடைகள் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தாலும், உள்நாட்டு தேவை முடிந்தபின் அனுமதி அளிக்கும் என எதிர்பார்ப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் விஜயகுமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் உலகளாவிய மருத்துவ ஆடை தயாரிப்பு துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவும் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இதன்மூலமாக கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார். அதே நேரம் பின்னலாடை துறையினர் மருத்துவ ஆடை தயாரிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.