ENGLISH-ல சரவெடி பேச்சு.. அசத்திய அரசு பள்ளி மாணவன்.. முதல்வர் முக.ஸ்டாலின் கொடுத்த விருது.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் கலை திருவிழாவில் கலந்துகொண்டு கலை அரசன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இந்நிலையில் அவர் ஆங்கிலத்தில் சரளமாக கவிதைகளை சொல்லும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஓவியம், கேலிச் சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்போட்டிகள் நிறைவடைந்தன. தமிழக அளவில் தேர்வான மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் 'கலையரசன்', 'கலையரசி' என்ற விருதுகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்துவரும் சஞ்சித் ஈஸ்வர் எனும் சிறுவன் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு கலை அரசன் பட்டத்தை வென்றிருக்கிறார். பள்ளி அளவில் தமிழ் பேச்சுப்போட்டி, ஆங்கில கவிதை வாசிப்பு மற்றும் மோனோ ஆக்டிங் ஆகியவற்றில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சஞ்சித் பின்னர் வட்டார அளவிலும் அதற்கு பிறகு மாவட்ட அளவிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மாவட்ட அளவில் வெற்றிபெற்றதால் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள சஞ்சித்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன்படி, மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்ட சஞ்சித் ஆங்கில கவிதை வாசிப்பில் முதலிடம் பிடித்திருக்கிறார். அதிக தரப்புள்ளிகளை பெற்ற சஞ்சித்திற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கலை அரசன் விருதை அளித்து கவுரவப்படுத்தியுள்ளார். இந்நிலையில், ஆங்கிலத்தில் சரளமாக கவிதையினை சொல்லும் சஞ்சித்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.