பெரு முதலாளிகளின் இடத்தில் கை வைக்குமா அரசு? - ஏழைகளின் வீடு ஆக்கிரமிப்பா? - சீமான் கேள்வி
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மண்ணின் மக்களை வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களின் வீடுகளை இடித்துத் தகர்த்து, அவர்களை வலுக்கட்டாயமாக வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் தலைநகரைச் சுற்றியுள்ள அடித்தட்டு உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை அப்புறப்படுத்தும் அரசின் அதிகார வெறியாட்டம் கடும் கண்டனத்திற்குரியது.
பெத்தேல் நகரில் நீண்டகாலமாக நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்தி மக்கள் வாழ்ந்து வருவதைக் கருத்தில்கொண்டே, கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது மனைப்பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வீடு ஒப்படைப்பு நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில் திடீரென திமுக அரசு தான் பிறப்பித்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. அப்போதிலிருந்து இப்போதுவரை அப்பகுதி மக்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப்பட்டா கேட்டுப் போராடி வருகின்றனர்.
ஈஞ்சம்பாக்கம் மக்களை அப்புறப்படுத்துவதா? அல்லது நிரந்தரப்பட்டா வழங்குவதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றமே வழிகாட்டலைக் கொடுத்த நிலையிலும், அவர்களுக்கு பட்டா வழங்கும் முடிவை எடுக்காமல் அந்நிலத்தைவிட்டு அவர்களை வெளியேற்றத் துடிப்பது அம்மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்.
சென்னை பெருநகரில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் வணிக வளாகம், கல்வி நிலையம், மருத்துவமனை, திரையரங்கு, பொழுதுபோக்குக்கூடங்கள் எனப் பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான எதுவொன்றிலாவது அரசு கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? அவைகள் மட்டுமே ஏன் கண்ணை உறுத்துகிறது?
ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குக்கேட்டு ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? இப்போதுதான் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? வெட்கக்கேடு. அதிமுக செய்த அதே பெருந்தவறை செய்து, திமுக அரசு மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே விரட்டியடிக்குமென்றால், அதிகாரத்தின் துணைகொண்டு நாளும் வதைக்குமென்றால், இதுதான் மக்களுக்கு விடியலைத் தரும் ஆட்சியா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்ற செய்திகள்
