"எப்போதும் என்னை வழிநடத்தும்".. பதவியேற்புக்கு முன் பெற்றோரிடம் வாழ்த்து.. அமைச்சர் உதயநிதியின் நெகிழ்ச்சி ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். அதற்கு முன்னர் தனது பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக நெகிழ்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார் அவர்.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார். இதனிடையே, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்னர் தமிழக அரசு அதனை உறுதிப்படுத்தியது. இந்நிலையில், ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சி தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னர் தனது பெற்றோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி. இதுகுறித்து அவர் எழுதியுள்ள ட்விட்டர் செய்தியில்,"எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022

மற்ற செய்திகள்
