'பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி'... 'விமர்சிக்க விரும்பவில்லை'... - பொன்.ராதாகிருஷ்ணன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 18, 2019 03:52 PM

தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

pon radhakrishnan talks about election commission after cast his vote

கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'இந்திய திருநாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இரண்டாம் கட்டமாகத் தமிழகத்தில் நடக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. அமோக வெற்றிபெறும்' என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி, புதிய வாக்காளர்கள் ஆதரவு தனக்கு உள்ளதாக கூறியுள்ள பொன். ராதாகிருஷ்ணன், இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கையுட்ன் தெரிவித்தார். 'வாக்களிப்பதில் மக்கள் மவுனப் புரட்சி செய்கிறார்கள். தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் சோதனை பொதுவானதுதான். என்னையும் சோதனை செய்தார்கள். அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர்' என்று அவர் கூறினார்.

'பிரதமர் பயணம் செய்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி, சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். பிரதமர் ஹெலிகாப்டர் சோதனை விஷயத்தில் பல விதிமுறைகள் உள்ளன. இந்தமுறை தேர்தல் பணியாளர்களின் தவறு காரணமாக பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

'பூத் சிலிப் இல்லாமல் ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணி ஓரளவு திருப்தியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #PONRADHAKRISHNAN #ELECTIONCOMMISSION