வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ‘டங்’ என கேட்ட சத்தம்.. மண்ணுக்கு அடியில் கிடச்ச புதையல்?.. ஆரணி அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீடு கட்ட தோண்டிய குழியில் புதையல் இருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). இவரது மனைவி சகுந்தலா (வயது 66). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு கட்டும் பணியை தொடங்கினர். அப்போது அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டிய போது எதோ சத்தம் கேட்டுள்ளது. உடனே மண்ணை கிளறி பார்த்தபோது 3 அடி ஆழத்தில் செம்பு பாத்திரம் ஒன்று மூடப்பட்ட நிலையில் இருந்தது.
இதைப் பார்த்த கட்டிட தொழிலாளர்கள், அந்த செம்பு பாத்திரத்தை சகுந்தலாவிடம் கொடுத்துள்ளனர். இதை வாங்கிய அவர், தங்க புதையல் இருக்கும் என நினைத்து வெளியே யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு எடுத்து சென்று வைத்துள்ளார். இந்த தகவல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தது.
அதில் சிலர் இதுகுறித்து ஆரணி வருவாய்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் போலீசார் சகுந்தலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சகுந்தலா புதையலை வருவாய் துறையினரிடம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சகுந்தலாவின் வீட்டில் சோதனை நடத்தி புதையல் பாத்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த செம்பு பாத்திரம் உடைக்கப்பட்டிருந்தது. அதனால் வருவாய் துறையினர் அந்த பாத்திரத்தில் இருந்த பொருட்களை சோதனையிட்டனர்.
அதில் கால் சலங்கை மணிகள், உடைந்த நிலையில் காப்பு வடிவிலான பொருட்கள், மணித்துண்டு, சிறிய துண்டுகளாக உலோக பொருட்கள், சதுர வடிவிலான உலோக பொருள் ஆகியவை இருந்தது. இதில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்ததா? என சகுந்தலாவின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து புதையல் பொருட்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மற்ற செய்திகள்
