'நிவர் புயல் கரையை கடந்த பிறகும்'... '6 மணி நேரத்திற்கு பாதிப்பு!!!'... 'எந்தெந்த மாவட்டங்களில் தாக்கம் இருக்கும்???'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நிவர் புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கத் தொடங்கும், புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரத்திற்கு பாதிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள தென் மண்டல வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், "நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று சென்னைக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று இரவு 8 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க கூடும். நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும். அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும். தற்போதைய நிலவரப்படி, புயல் கரையை கடந்த பிறகும் கடலோர மாவட்டங்களில் அதன் தாக்கம் 6 மணி நேரத்துக்கு நீடிக்கும். அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும்.
இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும். புயல் கரையைக் கடந்த பிறகு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் சமயத்தில் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். மேலும் திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 75 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.
இந்த பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக குடிசை வீடுகள், விளம்பர பலகைகள், மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். பப்பாளி மரங்கள் போன்ற தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். புயல் தரை வழியாக செல்லக்கூடிய பாதையில் நாளை எந்த விதமாக பாதிப்பு இருக்கும் என்பதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இதுவாகும். பலத்த காற்று வீசக்கூடிய இடங்களை இப்போதைய கணிப்பை வைத்து நாங்கள் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
