'சட்டப்பேரவையில் ஒருநாள் கூட லீவு போடாத முதல்வர் நான் மட்டும் தான்...' 'ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது யாரு...? - பரப்புரையில் தமிழக முதல்வர் அதிரடி பேச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 31, 2021 03:05 PM

நேற்று (30.03.2021) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தாராபுரத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பரப்புரையை முடித்துகொண்டு, திருச்சி மரக்கடை பகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.

tn cmo eps says not taken a single day off in the Assembly

அப்போது அதுமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

tn cmo eps says not taken a single day off in the Assembly

மேலும், “எம்.ஜி.ஆர். காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவின் கோட்டையாக இந்த திருச்சி மாநகரம் விளங்கியது. மீண்டும் அதை நீங்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைப் பார்த்து அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று தொடர்ந்து பொய்ப் பரப்புரையை நிகழ்த்தி வருகிறார். திருச்சியில் 60 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. 

திமுக தலைவர் செல்லும் இடமெல்லாம் நீட் தேர்வு குறித்து பேசுகிறார். ஆனால், காங்கிரஸ் - திமுக கொண்டு வந்ததுதான் இந்த நீட் தேர்வு. நீட் தேர்வு தமிழகத்தில் வரக்கூடாது என்று தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் முயற்சி செய்தார்; அதிமுக அரசும் அதை செய்தது. தமிழக அரசு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்று மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து அதன் மூலம் 435 மாணவ மாணவிகள் பன்முக மருத்துவர்களாக வெளியே வருவார்கள். தற்போது அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 

                                   tn cmo eps says not taken a single day off in the Assembly

தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தண்ணீரின்றி கஷ்டப்படுகிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்த தண்ணீரைப் பெறுவதற்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியை நம்பி விவசாயிகள் மட்டுமல்லாமல், குடிநீருக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய அந்த காவிரியில் தண்ணீர் இல்லாமல் கிடக்கிறது. எனவே, சட்ட ரீதியாகவும், பிரதமர் என்ற அடிப்படையிலும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை சரியான நேரத்தில் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

திராவிட முன்னேற்ற கழகம், கடந்தகால தேர்தல் அறிக்கையில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறினார்கள். அதை இதுவரை அவர்கள் கொடுக்கவில்லை. 2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட இரு சக்கர வாகனம் திட்டம் மூலம் தமிழகத்தில் 90 சதவீதம் மகளிருக்கு மானியத்தில் இரு சக்கர வாகனங்கள் கொடுத்துள்ளோம்.

 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது திமுக தலைவர் ஸ்டாலின்தான். ஆனால், தொடர்ந்து அவரே போராட்டம் நடத்தி வருகிறார். காவிரி டெல்டா பகுதி தற்போது பாலைவனமாக உள்ளது. ஒருவேளை திமுக ஆட்சி அமைந்திருந்தால் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனமும் தற்போது டெல்டா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும்.

                     tn cmo eps says not taken a single day off in the Assembly

பாரம்பரியம் என்றால் விவசாயிகள்தான். அப்படிப்பட்ட விவசாயிகளின் பெயரில் இங்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். தமிழக அரசு 32 லட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய தூங்கிக்கொண்டிருக்கும் அரசு போல நாங்கள் அல்ல; எப்போதும் விழித்துக்கொண்டிருக்கிறோம். 2019 - 2020இல் நீர் மேலாண்மை திட்டத்தில் நாம் விருது பெற்றிருக்கிறோம். நீர் மேலாண்மையில் அதிமுக அரசு மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. காவிரி குண்டாறு திட்டத்தின் கீழ் திருச்சியில் ஒரு பகுதி முழுமையாக பாசன வசதி பெறும். காவிரி ஆற்றில் ஒவ்வொரு பகுதியில் இருந்து கலந்து வரும் கழிவுநீரால் காவிரி நீர் முழுமையாக மாசடைந்து வருவதால், அதனை சுத்தம் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு மூலம் நாம் அதை செயல்படுத்த இருக்கிறோம். ரூ. 2,610 கோடியில் கல்லணையும் மீண்டும் பலப்படுத்தப்பட்டு கல்லணை கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படும். முக்கொம்பு அணை இந்தமுறை டெண்டர் விடப்பட்டு விரைவில் கட்டி முடிக்கப்படும். நான் முதல்வர் பொறுப்பு ஏற்றதில் இருந்து, விலைவாசியைக் கட்டுப்பாட்டோடு வைத்திருக்கிறோம். 52 லட்சத்து 31 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி இருக்கிறோம்.

பதவி ஏற்ற நாளிலிருந்து இன்றுவரை சட்டப்பேரவையில் ஒருநாள் கூட லீவு எடுக்காமல் சட்டமன்றத்திற்கு சென்ற ஒரே முதலமைச்சர் நான்தான். இதுவரை எந்த ஒரு கோப்புகளும் இருப்பில் வைக்கப்படவில்லை. அனைத்து கோப்புகளும் சரிபார்க்கப்பட்டு உடனடியாக அதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி நடைபெற நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இது உங்களுடைய அரசாங்கம்; நீங்கள் போடும் உத்தரவை செய்வதற்குதான் நாங்கள் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள்தான் நீதிபதிகள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்றால், அது திமுக அரசாங்கம்தான். இந்தியாவில் ஊழல் என்ற பெயரே இந்த திமுக அரசாங்கத்தால் வந்தது. கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக கட்சி. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என்றால் இந்தக் காற்றாலை ஊழல்தான்.

திமுக தரப்பில் ஊழல் பட்டியல் தயாரித்து கவர்னரிடம் கொடுக்கிறார்கள். அதுகுறித்து விசாரித்ததில் இரண்டு வருடத்திற்கு முன்பு சாலை போடுவதில் டெண்டர் விடப்பட்டு ஊழல் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டடிருந்ததை கணக்கு காட்டுகிறார்கள். ஸ்டாலின் போகுமிடமெல்லாம் கையில் ஒரு பெட்டியுடன் போகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, வரும் நாட்களில் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று கூறுகிறார். மேடை அமைத்து மனுவை பெறும் ஸ்டாலினுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. நான் முதலமைச்சராக இருக்கும்போது என்னிடம் கொடுத்தாலாவது அதற்கான தீர்வு கிடைக்கும். அவர் பெற்றுக்கொண்டு செல்வது எப்படி திருப்பி கொடுக்கும் என்பதை அவர் சிந்திக்காமல் மேடை போட்டு மனு பெறுகிறார். திமுகவில் யாரும் சாதாரன ஆட்களே இல்லை; எல்லாரும் 5,000 கோடி, பத்தாயிரம் கோடி சொத்து வைத்திருக்கக் கூடியவர்கள்தான்.

ஸ்டாலின் கூறுகிறார், ‘எடப்பாடி பழனிசாமிக்கு பல்லில் விஷம் இருக்கிறது’ என்று; மனுஷனுக்குப் பல்லில் விஷம் எப்படி இருக்கும். அவரால் தன்னுடைய கூட பிறந்த அண்ணனையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஸ்டாலினை போல வரவில்லை, உங்களைப்போல வந்திருக்கிறேன். எனவே நீங்கள் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற செய்ய நீங்கள் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும், இன்னும் அனேக திட்டங்களை இந்த அரசு மக்களுக்கு வழங்க காத்திருக்கிறது. எனவே, அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்’ என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn cmo eps says not taken a single day off in the Assembly | Tamil Nadu News.