‘தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து’!.. மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்..? முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கருத்து கேட்பு நடத்தப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, வாட்ஸ்அப் மூலம் கருத்துக்கள் பெறப்பட்டது. பெற்றோர்களிடமும், கல்வியாளர்களிடமும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்த அறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர் சமர்பித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (05.06.2021) அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுக்கப்பட்ட வேண்டும் என வலியுறுத்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமே உயர்கல்வி வகுப்புகளுக்கு தகுதியாக கருதப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வி இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.
மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும். உயர்கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்க நடைபெறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.