'டீம்ல இடம் கிடைச்சும் ஏன் இப்படி???'... 'எல்லாத்துக்குமே கோலியோட அந்த பிளான்தான் காரணமா?!!'... 'அப்போ அடுத்த போட்டி???'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையே உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் மோசமான பவுலிங்கால் அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இந்திய அணியில் நடராஜன், சாகர் போன்ற வீரர்கள் இருந்தும் கூட சைனி போன்ற வீரர்கள் தொடர்ந்து ஆடும் அணியில் இடம்பிடிப்பது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி அசத்திய தமிழக வீரர் நடராஜன் தற்போது இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக விலகியதால் நடராஜன் சேர்க்கப்பட்டதை அடுத்து சைனியின் காயம் காரணமாக நடராஜன் ஒருநாள் அணிக்குள்ளும் வந்தார். இருப்பினும் சைனியின் காயம் சரியானதால் ஆடும் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் போட்டியில் சைனி சரியாக பவுலிங் செய்யாததால் இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு நடராஜன் வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியிலும் நடராஜன் சேர்க்கப்படாமல் சைனியே இடம்பெற்று மோசமாக பவுலிங் செய்தார்.
அவருடைய மோசமான பவுலிங் காரணமாக அவருக்கு 6 ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டு, மற்ற ஓவர்களில் மயங்க், ஹர்திக் பாண்டியா ஆகியோரே பந்து வீசினர். இந்நிலையில்தான் இவ்வளவு மோசமாக பவுலிங் செய்யும் சைனியை அணியில் எடுத்து நடராஜனை புறக்கணிப்பது ஏன் எனக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதற்கு முக்கியமான காரணமாக அணியின் கேப்டன் விராட் கோலியே பார்க்கப்படுகிறார். முன்னதாக பும்ராவை ரோஹித் வளர்த்து கொண்டு வந்தது போல பெங்களூர் பவுலர் சைனியை வளர்த்து கொண்டு வர வேண்டுமென கோலி நினைப்பதால்தான் சைனி மோசமாக பவுலிங் செய்தாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கி அவரை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய அணிக்குள் இப்போதுதான் நடராஜன் வந்துள்ளதால் எதிர்காலத்தில் ஷமி இடம் காலியாகும்போது அணியில் நடராஜன் நிரந்தரமாக இடம்பெற வாய்ப்புள்ளதால், அணிக்குள் நடராஜன் இப்போது வேண்டாம் எனவும், இன்னும் கொஞ்சம் வலைப்பயிற்சி எடுக்கட்டும் எனவும் கோலி நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள நிலையைப் பார்த்தால் அடுத்த போட்டியில் எப்படியும் சைனி ஆடாமல் அவருக்கு பதிலாக நடராஜன் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
