'சரியா இன்கிரிமெண்ட் போடுற நேரத்தில் வந்த கொரோனா'... 'ஜூலையில் வேலை பறிபோனவர்கள்'... 'அதிலும் இந்த சம்பளத்தில் இருப்பவர்கள்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக பொருளாதாரத்தையே கொரோனா ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக உலகமே லாக்டவுனில் சிக்கித் தவிக்கிறது. அதிலும் பொருளாதாரம் கொரோனாவிடம் சிக்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இது இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கிய தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் வேலை நீக்கம் போன்ற நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் ஜூலை மாதம் மட்டும் இந்தியாவில் சுமார் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக, இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) தெரிவித்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த 50 லட்சம் பேரும் நிலையான சம்பளம் பெரும் ஊழியர்கள் என்பதாகும். இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் தொடங்கி இதுவரை மொத்தம் 1.89 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தரவுகளின் படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில் இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம் பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அதே நேரத்தில் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் ஜூலை மாதத்தில் ஜூன் மாதத்தை விடவும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை மக்கள் இழந்துள்ளார்கள்.
இதற்கிடையே சம்பள வேலைவாய்ப்புப் பிரிவில் வேலையை இழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல என்றும் அது பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் CMIE எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்
