'ஒரு கோடி இரண்டு கோடி இல்ல சார், 100 கோடி'... 'பரிதவித்து நிற்கும் தொழிலதிபர்கள்'... ஹரிநாடார் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரிநாடார்.
ஹரிநாடாரையும் சர்ச்சைகளையும் எப்போதுமே பிரிக்க முடியாது. நடமாடும் நகைக்கடை போலவே வலம் வரும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரின் பேரில் திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரைப் பெங்களூர் போலீசார் கடந்த மே மாதம் கைதுசெய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இஸ்மாயில் சக்ராத் மற்றும் பஷீர் ஆகிய இருவரும் ஹரிநாடார் மீது பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார்கள். அதில், குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய இருவரும் இணைந்து குஜராத்திலிருந்து அரபு நாடுகளுக்குப் பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்தது. அதனைச் சரி செய்வதற்காக வங்கியில் ரூபாய் 100 கோடி கடனாகப் பெற முயன்று வந்தனர். இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோரின் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரிநாடார் இரண்டு தொழிலதிபர்களையும் தொடர்பு கொண்டுள்ளார்.
அவர்களிடம் தான், கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட் (CAPITAL UP Investments) என்ற நிறுவனத்தின் ஆசியா நாடுகளுக்கான நிர்வாகி எனவும் இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு 6 சதவீத வட்டியில் அதிக அளவில் கடன் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அதற்கான ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை நம்பிய தொழிலதிபர் இருவரையும் ஹரிநாடார் சென்னை தி.நகர் வரவழைத்து ரூபாய் 100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும் இதற்கு 2 சதவீத கமிஷன் தனக்குத் தர வேண்டுமெனவும் ஹரி நாடார் கூறியதாகவும், இதனையடுத்து, மூன்று தவணைகளாக ரூபாய் 1.5 கோடி பணத்தை அவருக்குத் தொழிலதிபர்கள் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.
பின்னர் வங்கிக் கடன் குறித்துக் கேட்டபோதெல்லாம் தற்போது தான் தேர்தல் வேலைகளில் மும்மரமாக இருப்பதாகவும் தேர்தல் முடிந்து உடன் வங்கிக் கடன் உடனடியாக பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களை அலைக்கழித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் வங்கிக் கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது எனத் தொழிலதிபர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கு ஏதேதோ காரணம் சொல்லி ஹரிநாடார் சமாளித்ததாகவும், திருநெல்வேலி வருமாறு இரண்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அங்குச் சென்ற தொழிலதிபர்கள் தங்களுக்குக் கடன் வேண்டாம் எனவும் தாங்கள் செலுத்திய ரூபாய் ஒன்றரை கோடி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஹரி நாடார் பணத்தைத் தருவதாகக் கூறிய நிலையில், தொழிலதிபர்கள் போன் செய்தால் அதனை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த இருவரும் கடந்த மாதம் மாம்பலம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணை செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால், இதனைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தான் விசாரிப்பார்கள். எனவே அவர்களின் புகாரைத் தெரிவிக்க போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து ஆன்லைன் மூலம் தற்போது தொழிலதிபர்கள் அளித்துள்ள புகாரில், ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தங்களிடமிருந்து ஹரிநாடார் ஏமாற்றிய ரூபாய் 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறும் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே வங்கிக் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டு தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீது தொழிலதிபர்கள் இருவர் புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.